வியாழன், 18 டிசம்பர், 2014

அன்புள்ள ரஜினிகாந்த்...!

   (ரஜினிக்கு ஒரு மனந்திறந்த மடல்)


     நீங்கள் நடித்த படத்தின் தலைப்பிலேயே இந்த மனம் திறந்த மடலை எழுதுகிறேன். இன்றைக்கு லிங்கா படம் வெளியான மகிழ்ச்சியிலும், அந்தப் படம் வெற்றியா…? தோல்வியா…? என்ற தவிப்பிலும் நீங்கள் இருப்பீர்கள். இந்த நேரத்தில் இந்த கடிதம் அவசியமானதா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தாலும், இனியும் காலங்கடத்தாமல் என் கருத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலே இதை எழுதுகிறேன். இது சற்று பெரிய கடிதமாக இருக்கலாம். என்றாலும் கொஞ்சமும் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்களேன். காரணம் இது உங்களைப்பற்றிய விமர்சனக் கடிதமல்ல. உங்கள் மேல் உள்ள அக்கறையின் காரணமாகவே இந்தக் கடிதம் எழுத நேரிட்டது. சரி விசயத்திற்கு வருவோம்....
     எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், கமலஹாசன் என்று சிவந்த நிறத்து நடிகர்கள் கோலோச்சி வந்த திரையுலகில் கருப்பு நிறத்துக்கு ஒரு மவுசை உருவாக்கிய ‘மெடிக்கல் மிராக்கல்நாயகன் என்கிற வகையில் உங்களை நான் ரசித்திருக்கிறேன். உங்களின் வருகைக்குப் பின்தான் விஜயகாந்த், விஜய், விஷால் போன்ற கருப்பு நாயகர்களுக்கு வாய்ப்பு கிடைத்து புகழ்பெற முடிகிறது...!
    மேடை நாடக பாணி மிகை நடிப்பே நடிக்கப்பட்ட  காலகட்டங்களில் பைரவி, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலேஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்ட குரல்  உள்ளிட்ட  படங்களில் எதர்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சக கலைஞனும் உங்களின் நண்பருமான கமலஹாசனுக்கு தான் சற்றும் சளைத்தவனில்லை என்பதை நிரூபித்தவர் நீங்கள்...!

    அதன் பின்னர் வணிக ரீதியான படங்களில் கால்பதிக்கத் தொடங்கி உங்களின் தனிமுத்திரையோடு ‘ஸ்டைல் மன்னன்என்ற பட்டத்தைத் தாங்கி பலரையும் வசீகரித்தீர்அந்த வகையில் நீங்கள் நடித்த  நெற்றிக்கண், பில்லா, மூன்று முகம், முரட்டுக் காளை, நான் சிகப்பு மனிதன், நல்லவனுக்கு நல்லவன் என்று  பல படங்களும் உங்களின் ஸ்டைலுக்காக இன்றைக்கும் பாராட்டப்படுகிறது. உங்களின் அந்த நடிப்பு மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது...
    பல படங்கள் மூலம் வசூல் சாதனையைச் செய்த வணிக நடிகன் என்பதை நீங்கள் பலமுறை நிலை நாட்டியிருக்கிறீர். எனக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படாத அந்த காலகட்டங்களில் உங்களின் படமும், கமலின் படமும் வெளியாகும் நாட்களில் இரண்டு ரசிகர்களிடையேயும் போட்டி வரும் போதெல்லாம் நானும் அந்தச் சண்டையில் கலந்துகொண்டு குதூகலித்ததுண்டு. அது ஒரு காலகட்டம்.

    தற்போது காலமும், ரசனையும் மாறிவருகிறது. உங்களை எத்தனை செலவு செய்து சீவி சிங்காரித்தாலும் உங்களின் வயதும் முதிர்ச்சியும் அப்பட்டமாக தெரிகிறது. நாள்தோறும் கண்ணாடியில் முகம் பார்க்கும் உங்களுக்கு நான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை நானறிவேன்.
  ஆக, அந்த கால மாற்றத்திற்கு ஏதுவாக உங்களையும் மாற்றிக்கொண்டால்தானே சரியானதாக இருக்கும். மாறாக, அறுபத்தியாறு வயதிலும் உங்களின் மகள் வயதிற்கும் இளைய நடிகைகளுடன் காதல் செய்துதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது கொஞ்சமும் நியாயமில்லை என்றே எனக்குத் தோன்றகிறது ரஜினி.

   உங்களின் காலகட்டத்து நடிகர்களும், உங்களுக்குப் பின்னால் தோன்றிய நடிகர்களும் தங்களின் வயதிற்கும் நடிப்பு முதிர்ச்சிக்கும் ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனைப் பற்றி சொல்லலாம். இன்றைக்கும் அவருக்கான வணிக சந்தை  பெரியதாக இருந்தாலும், வம்படியாக ஒப்பனை செய்து கொண்டு, இளைய நாயகிகளுடன் காதல் செய்யும் படங்களில் நடிப்பதில்லை. முதிர்ந்த தோற்றத்தில் நடித்தாலும் அவருக்கான ரசிக கூட்டம் ரசித்துப் பாராட்டுகிறது. ஆக, இந்தி திரையுலகில் அவருக்கான இருப்பு இன்னும் இருக்கிறது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
    ஆனால், பாருங்கள் ரஜினி, உங்கள் வயதில் மூன்றில் ஒரு பங்கே வயதைக் கொண்ட இளம் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி இருக்கிறதே சகிக்க முடியாததாக இருக்கிறது. உங்களை இளமையாகக் காட்ட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் செலவில் பல நல்ல படங்களை எடுத்திருக்கலாம். அத்தனை பொருட்செலவு செய்யப்பட்டாலும் உங்களின் முதுமை பல இடங்களில் பல்லிளித்து காட்டிக்கொடுத்து விடுகிறது.

    குறிப்பாக நீங்கள் நடித்த எந்திரன் படத்தில் ரோபோ வேடத்திற்கு நீங்கள் செய்துகொண்ட ஒப்பனையில் ரஜினி என்ற நடிகன் தெரியவே இல்லை. மறைந்த நடிகர் ‘தேங்காய்‘ சீனிவாசனைப் போலத்தான் பல காட்சிகளில் தெரிந்தீர்கள் என்ற விமர்சனம் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் ஐஸ்வர்யாவை லவ்வும் காட்சியிலும், முன்னதாக சிவாஜி படத்தில் நடிகை ஸ்ரேயாவையும், அதற்கும் முன்னதாக சந்திரமுகி படத்தில் நயன்தாரவையும் லவ்விய காட்சிகளும் ரசிகர்களை நெளிய வைத்தது. அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படி தெரிந்திருந்தால் இப்பொழுது வந்திருக்கும் லிங்கா படத்தில் இரண்டு இளம் நாயகிகளுடன் ஆட்டம் போட்டிருக்கமாட்டீர் தானே..?  
      ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இந்த இயக்குநர்கள் சூப்பர் ஸ்டாரை சூப்பராக காட்டுகிறோம் என்று கூறி, கணினியின் உதவியால் உங்களைப் போன்ற கிராபிக்ஸ் உருவத்தை வரைந்து காட்சிப் படுத்துகிறார்கள். இதை வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால், உங்களை வைத்து காமெடி... கீமெடி... செய்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. உங்களின் எதர்த்த நடிப்பு, வேகம், ஸ்டைல் ஆகியவை உங்களைவிட்டு என்றோ விலகி ஓடிவிட்டது என்பது உங்களுக்குப் புரிகிறதா இல்லையா…?

    உங்களின் தற்போதைய படங்கள் லாபகரமாக ஓடவேண்டுமென்றால் பல யுத்திகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கிறது. பிரமாண்டம் என்ற போர்வையில் அதிக பொருட்செலயில் படத்தை தயாரித்தாக வேண்டும். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஷங்கர் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, நயன்தாரா தொடங்கி சோனக்ஷி சின்ஹா வரையிலான இளம் நாயகிகள் நடிக்க வேண்டும். இப்படி பல பட்டியல்களைக் கொண்டே உங்களின் படங்கள் உருவாகிறது. 
   மேற்படியான கட்டமைப்பில் உங்கள் படம் உருவாக்கப்படுவதை எதைக் காட்டுகிறது என்றால், உங்களுக்கென்று இருப்பதாகச் சொல்லப்படட அந்த மவுசு தேய்ந்து விட்டதைத்தான். அதெல்லாம் பொய் ரஜினிக்கென்ற ‘மார்க்கெட் வேல்யூ இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்று உங்கள் பின்னால் உள்ள கூட்டம் ஜல்ரா தட்டும். அது உண்மையென்றால், ஒரே ஒரு படத்திலாவது உங்கள் வயதிற்கேற்ற பாத்திரத்தில் நடியுங்களேன் பார்ப்போம். அப்பா ரஜினி, தாத்த ரஜினி என்று பிளாஷ் பேக் சொல்லாத கதையாக தேர்ந்தெடுத்து நடித்து நிரூபியுங்கள்.
   உங்கள் இளவயது தோற்ற பாத்திரத்தைவிட முதிர்ச்சியான தோற்றத்தில் வரும் பாத்திரத்தின் ஸ்டைல் நடிப்பு ஓரளவு நன்றாகத்தான் உள்ளது என்பது உங்களுக்குப் புரியுமா...? எடுத்துக்காட்டு படையப்பா படத்தில் பிற்பகுதியில் வரும் முதிர்ந்த ரஜினியின் ஸ்டைல் நடிப்பே உங்கள் ரசிகரையும் ஈர்த்தது. அந்தப்படத்தின் வெற்றிக்கு அந்த நடிப்பே சன்று. வயதிற்கேற்ற பாத்திரத்தில் நடித்தால் அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள் என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
    ஒன்றை நினைத்துப் பாருங்களேன் ரஜினி, உங்களுடன் தொடக்க காலத்தில் இணையாக நடித்த பல நடிகைகள் அம்மா, அக்கா வேடங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பேச்சுக்காக நடிகை ராதிகாவை இன்றைய இளம் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கி லவ்வச் சொல்லுவோம். அதேபோல் நடிகை அம்பிகாவுடன் உங்கள் மருமகன் தனுசை ஜோடியாக்கி விரட்டி விரட்டி காதலிப்பதைப் போன்று படமெடுத்தால் எப்படியிருக்கும்….? உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா…?
    எங்களைப் போன்றவர்கள் அதனால் என்ன தவறு என்று கேட்பதோடு, அதை நியாயப்படுத்துவோம். ஆனால், பெண்களுக்கென்றே புதிய இலக்கணத்தை உங்களின் படங்களின் மூலம் கற்றுக்கொடுத்துவரும் நீங்களும், உங்கள் ரசிகர்களும் என்ன கண்ணோட்டத்தில் அதைப் பார்ப்பீர்கள்…?
   அப்படியொரு ஜோடி நடிப்பதை நினைத்துக்கூட பார்க்க கூச்சப்படுவீர்கள் தானே….? அப்படியானால், நீங்கள் மட்டும் கொஞ்சமும் வெட்கப்படாமல் இளம் நாயகிகளுடன் இணை சேர்ந்து நடிப்பது எப்படி சரியாக இருக்கும். முத்துப் படத்தில் நீங்கள் பார்த்து வளர்ந்த குழந்தை நட்சத்திரமான மீனாவுடன் ஜோடி சேர்ந்த பொழுதே கடும் விமர்சனம் உங்கள் மீது எழுந்தது. அப்பொழுதே நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும். அப்படியான சுதாரிப்போ, சிந்தனையோ உங்களிடம் எழவில்லை. சரி கலையின் மீது உங்களுக்கு தீராத காதல் இருப்பதால்(?) சின்ன வயது நடிகையுடன் நடிக்க ஒத்துக் கொள்கிறீர் என்று எங்களை நாங்கள் சமாதானம் செய்து கொள்கிறோம். வேறு என்ன செய்வது…?
      இங்கே நீங்களும், உங்கள் ரசிகர்களும் ஒரு கேள்வியை கேட்கலாம். அதாவது. அய்ம்பது ஆண்டுகளைக் கடந்தும் திரையுலகில் நாயகனாக நடித்துவரும் சக கலைஞன் கமலஹாசன் மீது, ஏன் இந்த விமர்சனம் எழவில்லை என்று. சரியான கேள்விதான் இதை நானும் ஒப்புக்கொள்ளவில்லை தான். ஆனால், உங்களுக்கும் அவருக்குமான வேறுபாடு என்னவெனில், நீங்கள் ரஜினியாக காட்டவேண்டும் என்பதற்காக ஒப்பனை செய்கிறீர். அவரோ கமலாக தெரியக்கூடாது என்று தனக்கு ஒப்பனை செய்துகொள்கிறார். இது உண்மைதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்.
    ஆனால், உங்களின் படத்தில் கதையைப் பற்றியோ பாத்திரங்களைப் பற்றியோ நான் குறிப்பிட முடியாது. முத்து, அருணாசலம், படையப்பா போன்ற படத்தில் என்ன கதையோ, என்ன பாத்திரமோ அதுவே தான் சில டிங்கரிங் மற்றும் பட்டி வேலை பார்க்கப்பட்டு. ‘லிங்காவாக வெளியே வந்திருக்கிறது. ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கிறேன் பேர்வழி என்று கே.எஸ்.ரவிக்குமார் என்னும் சமூக அக்கறை என்பதே சிறிதுமற்ற மசாலா இயக்குநர் செய்யும் வேலைதான் இது என்று எனக்குப் புரிகிறது. இப்படிப்படட படங்களில் நடிப்பதால் உங்களின் மார்க்கெட் வேல்யூ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
     மாபெரும் வெற்றி பெற்றதாக சொல்லப்பட்ட சிவாஜி மற்றும் எந்திரன் படங்கள் நட்டத்தையே தந்தது என்று விவரம் தெரிந்தவர்கள் இப்பொழுது சொல்கிறார்கள். நாளைக்கு அந்தப்பட்டியலில் இன்றைய லிங்காவும் இணையலாம்.

     ‘சொத்தையெல்லாம் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நடித்தே, பல கோடிகளை சம்பாதித்தவர் என்று உங்களைப்பற்றிய ஒரு நக்கலான கருத்து சமூக வலைத்தளமான முகநூலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஏகப்பட்ட லைக்குகள் வேறு விழுந்த வண்ணம் இருக்கிறது. அதேபோல், ‘2050ஆம் ஆண்டில் ரஜினியின் அம்மாவாக நடிப்பதற்கு தெய்வத் திருமகள் படத்தில் நடித்த சாராஒப்புக்கொண்டார்என்ற ஏச்சுகளும் பேச்சுகளும் முகநூலில் வரத்தொடங்கிவிட்டது. அந்த கருத்துகள் வருவதற்கு முட்டுக்கட்டைப் போட முயற்சிக்காதீர். மாறாக உங்களை மாற்றிக் கொள்ள கொஞ்சமாவது முயற்சி செய்யுங்களேன் ரஜினி.  
    மற்ற இளைஞர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுங்கள் என்பதல்ல என் கருத்து (அப்படியொரு முடிவை எடுத்தால் அதுவே இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்யும் பெரும் நன்மையாக அமையும்). உங்களின் வயதிற்கும் கண்ணியத்திற்கும் ஏற்றார் போன்ற பாத்திரங்களை வடிவமைக்கச் சொல்லி அதில் நடியுங்கள். அதில் உங்களின் தனித்துவத்தை, ஸ்டைலை வெளிப்படுத்துங்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்களை அதிகம் வசீகரித்திருக்கும் நடிகர் அஜித் தன்னை இளைஞனாக காட்டிக் கொள்ள முயற்சிக்காமல் முதிர் கன்னனாகவே (முதிர் கன்னிக்கு ஆண்பால் பெயர்) நடிக்கிறார். அவரின் படங்கள் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தருகிறதே. அதுபோல் நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது என்பதே என் கேள்வி. 
    இங்கே உங்களின் ரசிகக் கூட்டத்தைப் பற்றி சொல்லியாக  வேண்டும். உங்களின் புகழ் உச்சாணியில் இருந்த காலகட்டத்தில் உங்களின் தலையில் விழுந்த முன்வழுக்கையை மறைக்க நீங்கள் செய்து கொண்ட ஹேர் ஸ்டைல் உங்களின் அக்மார்க்கில் ஒன்றாகிவிட்டது. இதைப் பார்த்து பல இளைஞர்கள் தாங்களும் தங்கள் முன்மண்டையை சிரைத்துக் கொண்டு உங்கள் ஹேர் ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார்கள். அதுமட்டுமா, நீங்கள் திரைப்படங்களில் போட்டு நடிக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்து போட்டு உலா வந்தனர். எனக்கெல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது. உங்களின் பல ரசிகர்கள் சாலைகளில் நடக்கும் போதுகூட இயல்பாக நடக்காமல் உங்களைப் போன்று நடந்து வருவார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சர்க்கஸ் பபூன்கள் செய்யும் கோமாளித்தனமாகவே தோன்றும்.

    அந்தளவுக்கு கண் மூடித்தனமாக (அறிவுகெட்டு என்றுகூட அதற்கு பெயரிடலாம். ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்.) அடியொற்றி வரும்  உங்கள் ரசிகர்கள்தான் லிங்கா போன்ற படங்கள் வெளிவருவதற்குக் காரணமாக அமைகிறார்கள் என்றால், அப்படி அவர்களை மூளைச் சலவை செய்திருப்பது உங்களின் வணிக குரூர புத்தியே என்று நான் குற்றம் சாட்டுவேன். ‘என்னை வாழவைத்த தமிழ்மக்களே…என்று விழிக்கும் நீங்கள், அவர்களுக்கு விட்டுச் செல்வதெல்லாம், பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், மூடத்தனமான பழக்க வழக்கங்களையுமே. ஆனால், உங்களுக்கு மட்டும் எதுவுமே வணிகம் சார்ந்த லாப நோக்குச் சிந்தனைதான்.

      இந்த லிங்கா படமும் ஒருவேளை வசூலில் சாதனை படைக்கலாம். அதுகூட, ரசிகர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக அமையலாமே தவிர, சிறப்பான படம் என்ற காரணத்திற்காக இருக்காது என்பதே என் மேலான கருத்து. இது போன்ற படங்களின் பட்டியல் தொடரும் பட்சத்தில் திரையுலக வாழ்வில் இருந்து உங்கள் ரசிகர்களாலேயே நீங்கள் ஒதுக்கப்படும் அவலச்சூழல் ஏற்படும் என்பது நிதர்சனம்.
     அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே இந்த கடிதம். ஆகவே, தயவு செய்து உங்களின் அலிச்சாட்டியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் ரஜினி. இறுதியாக கொஞ்சம் மன வருத்தத்துடன்தான் இதைச் சொல்கிறேன்,

ரொம்பவுமே கடுப்பேத்துறீங்க மை லார்ட்…. 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

இது அநீதியான தீர்ப்புதான்...

அவரை புனிதரென்று புகழ்பாட போவதில்லை. ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கபட்டிருக்கம் தண்டனை ரசிக்கத்தக்கதாக இல்லை என்பது உண்மைதான். 66கோடி ஊழல் செய்தார் என்பதாக இல்லாமல், சொத்து குவிப்பு வழக்காகத்தான் இன்றைக்கும் சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் மிஞ்சக்கூடிய வகையில் பல ஊழல்களும், சொத்து குவிப்புகளும் பல அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றுக்கெல்லாம் இப்படியான தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்கிறது.
1991-96 வலையிலான ஜெவின் ஆட்சி பொது மக்களை மட்டுமல்ல அவரது கட்சியனரைக்கூட விமர்சிக்க வைத்தது. அதன் வெளிப்பாடுதான் 1996-ம் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி என்கிற நிலைக்குச் சென்றது அதிமுக. ஆனால், தற்போதைய ஆட்சி காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் மக்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது.

 அதன் பின்னுட்டமாக தான் உள்ளாட்சி மற்றும் இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக பெற்ற வெற்றியைப் பார்க்க வேண்டியிருக்கு. திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுக்கு ஜெயாவின் இன்றைய செயல்களும், அவர் மீது மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும் கிழியை ஏற்படுத்தவே செய்திருக்கும். அதனால் தான் ஜெயாவுக்கு எதிரான தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதும் வரவேற்று உற்சாகப் பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் புனிதர்களாக என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.
உண்மையில் ஜெவுக்கு எதிரான இந்த வழக்கில் பலருக்கும் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை காணமுடிந்தது. இங்கே நம்முடைய கேள்வி என்னவெனில், ஜெவுக்கு எதிரான வழக்கில் இத்தனை அக்கறை காட்டியவர்கள், ஆணவ ஆன்மீகக் குறியீடாக தண்டத்தோடு தண்டமாக சுற்றி வரும் சங்கரராமன் கொலைக்குற்றவாளி என்று கூறப்பட்ட காஞ்சி சங்கராச்சரியர் வழக்கில் ஏன் இத்தனை அக்கறை காட்டவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய உத்தமர்கள், சங்கராச்சரி விசயத்தில் அங்கே வேண்டாம், குறைந்தபட்சம் உயர்நீதி மன்றம் வரையாவது சென்றிருக்கலாமே...? ஏன் அதை செய்யவில்லை....?
இராயிரம் மக்களை கொன்றொழிப்பவர்க்கு நாடாளும் பரிசை கொடுத்துவிட்டு, ஊழலுக்கு மட்டும் இந்த தண்டனை என்றால், நீதிமன்றத்தின் மீது எனக்கு அச்சமே ஏற்படுகிறது.... எத்தனையோ விசயங்களில் சூமோட்டோவாக வழக்கை நடத்தும் நீதியரசர்கள் இதுபோன்ற படுபாதக செயல்களின் போது வாய்மூடி மவுனிகளாக இருந்து விடுகிறார்களே ஏன்...?
ஆக, மனித உயிர்களை விடவும் கேவலம் பணத்திற்குத்தான் மதிப்பு என்று சொல்லாமல் சொல்லுகிறார்களா....?
என்றாலும், ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையே அவருக்கும் மக்களுக்குமான பெண்கள் மத்தியில் இணக்கத்தை அதிகரிக்கவேச் செய்யும் என்பதே நிதர்சனம்...

மக்களை கவரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மற்ற அரசியல் தலைவர்கள், ஜெ பெற்றிருக்கும் தண்டனை மூலம் அரசியல் எதிரியை வீழ்த்தியதாக கொக்கரித்து நிற்பது அநாகரீகமாகவே உணர்கிறேன். என்ன இருந்தாலும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மற்ற அரசியல் தலைவர்களுக்கு ‘ஜெயலலிதா சிம்ம சொப்பனம் தான்’........

உங்கள் பாராட்டில் சிறிதும் நியாயமில்லை தோழர்களே.....


விஜய்யின் கத்தி படத்தை இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் அதிகமாக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட்கள் மிக அதிகமாகவே கத்தியைத் தலையில் தூக்கி வைக்கிறார்கள்...

அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது ஜீவா (எ) ஜீவானந்தம் கதாபாத்திரமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நாயகன் பேசும் வசனங்களும்தான்....
தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒரு நடிகர், அதிகப்படியான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்தில், புரட்சிகர வசனங்களை பேசுவது என்பது வரவேற்வக்கத்தக்கதுதான்...
காதல், சண்டை, சேட்டை, நக்கல் என்றிருந்த ஒரு நடிகர் பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனையை, குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனையை கையெலடுத்து நடித்திருப்பதும், ஊழல், தீவிரவாதம், ரவுடியிசம் என்று ரீல் ஓட்டிக் கொண்டிருந்த இயக்குநர் ஒருவர் பன்னாட்டு நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்க முயற்சித்திருப்பதை நீங்கள் பாராட்ட நினைப்பது தவறில்லைதான்....
ஆனால், கத்தி என்கிற கதிரேசனால்தான் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்பதை சொல்வதற்கு ஜீவா என்கிற ஜீவானந்தம் என்கிற பாத்திரத்தை இத்தனை மொக்கையாக, சம்பந்தமேயில்லாமல் அழுது புரளும் கோழையாக காட்டியிருப்பதும், அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த கிராமமும் கோழைகளின் வாழ்விடமாக காட்டியிருப்பதும் அபத்தத்திலும் அபத்தம் என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஏன்......?
கார்ஜிக்கும் சிங்கமென வாழ்ந்த ஒரு தோழரின் பெயரைக் கொண்ட ஒரு பாத்திரத்தை பெருமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று கதறியழும் கையாலாகத கோழையாக்கிய முருகதாஸையும், அந்த பாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்த விஜயையும் பொதுவுடமை தோழர்கள் கண்டித்திருக்க வேண்டும்... 
மாறாக, கத்தி படத்தை உச்சி முகர்ந்து புலாங்கிதம் அடைவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது....

‘லைக்கா’வின் முதலீட்டில் தயாரிக்கப்படாமல், ஜீவா என்கிற நிஜ நாயகனை நீர்த்துப் போன பாத்திரமாக காட்டப்படாமல், சம்பந்தமேயில்லாமல் நாயகியை அரைகுறையாக ஆடவிடாமல் படத்தை எடுத்திருந்தால்.... 
உங்களின் பாராட்டில் ஒரு நியாயம் இருந்திருக்கும். நாங்களும் அந்த பாராட்டில் பங்கெடுத்திருப்போம்........

ஆப் கி பார்... மோடி சர்க்கார்...

வேண்டுதல் வேண்டாமை...

நாலு விசியத்த நாலுபேத்துக்கு புரியறமாதிரி நறுக்குனு சொல்லிப்பழகு. சும்மா வழவழா கொழகொழான்னு ஒழறிட்டிருக்காதன்னு நீங்க எத்தன தடவ சொன்னாலும் என்ற மரமண்டைக்கு ஏறவே மாட்டேங்குதுங்க. எதுய சொன்னாலும் கொழப்பமாவே சொல்லி பழகிப்போச்சு. எல்லா இந்த எழவெடுத்த குதர்க்கவாதிங்க கூட வெச்சிகிட்ட சகவாசந்தான் காரணம். நாட்ல எந்த நல்ல விசியம் நடந்தாலும் நொட்ட சொல்றதே இவிங்க பொழப்பு.  
அப்படித்தாங்க பிரதமர் மோடியும், அவரு கட்சிய சேந்த கூட்டாளிங்களும் அங்கங்க கூடிநின்னகிட்டு, அங்க கூட்டு, இங்க பெருக்குனு சொல்லிட்டிருந்தத கேட்டதும், நாங்ககூட இந்த பிரதமருக்கு கணக்குப் பாடத்துல ரொம்ப ஆர்வம் வந்திருச்சுனு தானுங்க மொதல்ல நெனச்சேன். அவரோட பத்திரிகை பங்காளிங்களும் அப்படித்தானுங்க அப்படி கூட்டுனாரு, இப்படி பெருக்கினாருன்னு செய்தியாக போட்டுத் தள்ளுனாங்க.
என்னடா கணக்குப் பாடத்த சிலேட்டுலேயும், நோட்டுப் புத்தகத்திலேயும் போடாம பெரிய பெரிய குச்சிய வெச்சுகிட்டு தரையில போடறாங்களே. ஒருத்தருகூட விடையென்னனு சொல்லலையேங்கற கேள்வி என்ற யோசனைக்கு அப்பவே எட்டுச்சு. அப்பறந்தான் தெரிஞ்சது, அவிங்க போடறது கணக்கப் பாடமில்லையாம். இந்தியாவ தூய்மை செய்யற திட்டம்னு...?  
அதுக்குகூட ஏதோ ‘சமச்சா பாரம்’னு வேற பேரு சொல்றாங்க.  அய்யய்யோ... அத ‘ஸ்வச்சா பாரத்’னு சொல்லனுங்களா...? சரிவுடுங்க... இந்த எழவெடுத்த பேரா முக்கியம். அதுல இருக்கிற விசயந்தானுங்களே நமக்கு வேணும். இந்தியாவ தூய்மைப்படுத்தறது எவ்ளோ பெரிய காரியம். அதை நம்ம பிரதமரா இருக்கற மோடியே செய்றாருங்கறப்ப அதைய பாராட்டுனுமா இல்லையா..? அதவுட்டுட்டு  வழக்கம் போலவே இந்த குதர்க்கவாதிங்க கிண்டல் பண்றாங்க.
மோடி எத சொன்னாலும், செஞ்சாலும் எகத்தாளமா பேசறதே இவிங்க பொழப்பு. அப்படித்தான், குஜராத்துல கஷ்ப்பட்டுகிட்டிருந்த இசுலாமியர்களுக்கு நன்மை செய்யணும்னு, ‘அகோரி’ அவதாரமெடுத்து வரம் கொடுத்தாரு. அதைக்கூட கிண்டல் பண்ணுனவிங்க, இதவுட்ருவாங்களா...?  
ஆமாங்க, தூய்மை இந்தியாவ எப்படி உருவாக்குறதுன்னு அவிங்ககிட்ட தெரியாத்தானமா கேட்டுப்புட்டேனுங்க. அதுக்கு, கொஞ்சம் தொடப்பக்கட்ட... நெறயா நடிப்பு... ரொம்ப நெறயா கேமரானு... நக்கலா பதில் சொல்றாங்க. அதோட விட்டாங்களா, தூய்மை இந்தியாங்கறது வேறொன்னுமில்லீப்பா, சுத்தமா இருக்கற இடத்துக்குப் போயி தொடப்பக்கட்டயால தடவிக்காட்டறதுதான்னு குசும்பு பேசறாங்க. 

   ஏனுங்க, நாட்ட சுத்தமா வெச்சுகணும்னு மோடி நெனைக்கிறது தப்பா...? நானே அதுல போயி கலந்துக்கலாம்னு இருக்கேன். அதப்போயி கிண்டல் பண்றீங்களேன்னு... திருப்பிக் கேட்டேன். அதுக்கு அவிங்க நெறய போட்டவ காட்டி,  ஏம்பா பிரதமரும் அவரோட கட்சி சகாக்களும் சுத்தப்படுத்தற எடத்துல கொஞ்சங்கூட குப்பையே இல்லையே இது போங்காட்டம்னு உன்ற மூளைக்கு எட்டலீயான்னு...? கேட்கிறாங்க.
அப்படியே குப்பய கூட்டிப் பெருக்கினதா வெச்சிகிட்டாலும், ஒருத்தனாவது குப்பைய கையில எடுத்தானுங்களா...? கார்ப்பரேஷன் குப்ப வண்டி ரோட்டுல போனாலே மொக்கத்த சுழிச்சுகிட்டு, மூக்கப்பத்திகிற இவனுங்க எப்படிபா நாட்ட சுத்தப்படுத்துவனுங்கனு கொஞ்சம் சத்தமாவே கேட்கிறாங்க. 
இந்த கேள்வி அந்த காவிக்கட்சிக்காரங்க காதுல விழுந்திருக்கும். ஒடனே இவிங்களுக்கு ரோசம் வந்திருக்கும். அதனால, சாக்கடைல எறங்கி சுத்தப்ப படுத்துவாங்களோன்னு நானும் நெனச்சேன். அந்த எண்ணத்துல வண்டி வண்டிய குப்பையள்ளி போட்டுட்டு, சுத்தப்படுத்த போறம்னு அவிங்க முடிவுபண்ற எடத்துல முன்னமே குப்பைய கொட்டிட்டு, மறுநாளு அந்த எடத்த சுத்தப்படுத்தறம்னு போஸ் கொடுக்கறாங்க. 

அப்பறம் இன்னொன்னு அந்த குதர்க்கவாதிங்க சொல்றாங்க, நாட்ட தூய்மை படுத்தறம்னு இவனுங்க காட்டுன பிலிம்க்கு கோடிக்கணக்கான ரூபாய செலவு செய்றானுங்க. ஆனா, இன்னைக்கு மனுசன் பேண்டத மனுசனே சுமக்கற கொடுமய மாத்தறதுக்கோ, அல்லது அதப்பத்தி வெக்கப்படுறதுக்கோ இவனுங்களுக்கு துப்புகிடையாது. முடிஞ்சா அந்த வேளைய ஒரேஒரு தடவ பாக்கசொல்லு. அப்ப நம்பறோம் இவனுங்க  நெசமாலுமே இந்தியாவ தூய்மை படுத்தறானுங்கன்னு.  
அதோடு விட்டாங்களா, அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர்-6ந் தேதி பாபர் மசூதிய இடிச்சு கலவர நாளா மாத்தின மாதிரி, காந்தியார் பிறந்தநாளான அக்டோபர்-2ந் தேதிய ‘ஸ்வச்சா பாரத்’னு மாத்தி குப்பைய கொட்றானுங்கன்னு என்னன்னமோ சொல்லி என்னைய ‘சுத்தமா’ குழப்பிட்டாங்க இந்த குதர்க்கவாதிங்க. ஆக மொத்தத்துல, இவனுங்க  கூட்டல் பெருக்கல் கணக்கப்பாத்த, மோடி சர்க்கார்... ஆப் கி பார்... இப்படியே போனா பிஞ்சு போகும் வௌக்குமார்னு தான் சொல்லத் தோணுது... 
-------------
ல்லவரு... வல்லவரு... நாட்டுக்காக தெனமும் ஒழச்சு, ஓடா தேஞ்சவரு... தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் ஒரு பிரச்சனைனா ஓயாம குரல் கொடுப்பவரு... ஆமாங்க, தமிழ்நாட்டுக்கு தண்ணீ தரமாட்டேன்னு கர்நாடகா சொன்ன போது, அத கண்டிச்சு போராட்டம் செஞ்சவரு... பெரியாறு அணைப் பிரச்சனைல கேரளா சண்டித்தனம் செஞ்சபோது அதையெதுத்து பேரணி போனவரு... தமிழக மீனவர்கள் சிங்களப் படையால கொல்லப்படும் போதும், தாக்கப்படும் போதும் கொஞ்சுமும் பொறுக்கமாட்டாம தமிழர்களை ஒருங்கிணைச்சு சிங்கள அரசுக்கு எச்சரிக்க விட்டவரு... (ஸ்..ஸ்...ஸ்...ஸ்... யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே) இப்படி தன் வாழ்க்கையவே மக்களுக்காக அர்ப்பணிச்சவரு சமூகப் போராளி ரஜினிகாந்த் (ஆவ்... எவன்டா அது... தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பறது). 
இப்படி எந்தவித சுயநலமில்லாம வாழ்ந்திட்டிருக்கற ரஜினிங்கற மகத்தான புரட்சியாளன் தமிழ்நாட்டின் முதல்வரா வரணும்னு அவரின் புதிய ஜால்ராக்களான அமீரும், சேரனும் கேட்டுகிட்டதுல என்னத் தப்புன்னு நாங்கேக்கறன்.

அவரு இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செஞ்ச நன்மைகள் ஒன்னா ரெண்டா. கிட்டத்தட்ட 35வருஷத்துல 150 படங்கள்ல நடிச்சிருக்காரு. நாட்டின் முன்னேற்றத்திற்கு தன்னோட திரைப்படத்தின் மூலமா  எவ்ளோ பெரிய தத்துவார்த்த சிந்தனைகள வெளிப்படுத்தினவரு. குறிப்பா பெண்களின் முன்னேற்றத்திற்கு, சொன்னது இருக்கே, தஞ்சாவூரு கோயில் கல்வெட்டுல செதுக்கி வெச்சு பாதுகாக்க வேண்டிய தத்துவங்கள். 
பொம்பளனா பொறும வேணும், அவசரப்படக்கூடாது... அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது... அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது... கட்டுப்பாடு வேணும், இப்டி கத்தக்கூடாது... பயபக்திய இருக்கணும் இப்டி பஜாரித்தாணம் பண்ணக்கூடாது... மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்... அதிகமா ஆசப்படற ஆம்பளயும்... அதிகமா கோபப்படற பொம்ளயும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு சொல்லி புதிய பிற்போக்கு வரலாற படச்ச வரு (மன்னிக்கணும் முற்போக்கானு படிங்க) இந்த ரஜினி.
அதுமாட்டுமா, சினிமாவுல நடிச்சு சம்பாதிச்ச பணம் கெடுதலானதுன்னு தெரிஞ்சு  போயி, அந்தப்பணம் தமிழ்நாட்டுல இருக்கக்கூடாதுன்னு பெங்களுரு, அய்தராபாத்துனு பல முக்கியமான இடங்கள்ள முதலீடு செஞ்சிருக்கற தொலைநோக்குப் பார்வைனு அவரு முதல்வராகறதுக்கு எவ்ளவோ தகுதியிருக்கு. அதனால அடுத்த ரெண்டு மூனு வருஷத்துல தான் முதல்வராகற மதிரியென்ன இந்திய பிரதமரே ஆகறமாதிரி படத்த எடுத்து, அதிலும் பெண்களில் முன்னேற்றத்திற்கு ஏதுவான தத்துவங்களை சொல்ல முயற்சி செய்வேன்னு உங்களின் புதிய ஜால்ராக்களான அமீருக்கும், சேரனுக்கும் புரிய வைங்க ரஜினி.
-------------------
சுமேரியர் நாகரீகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், திராவிடர் நாகரீகம்னு உலகத்தில் எத்தனையோ நாகரீகங்களைப் பத்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். இப்போ தமிழ்நாட்ல புதுசா வளர்ந்திட்டிருக்கற அரசியல் நாகரீகத்தப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுங்களா...?
அப்படி உங்களுக்கு தெரியலைனாலோ, அதப்பத்தி நீங்க கேள்விப்படலைனாலோ கவலப்படாதீங்க. அரசியல் நாகரீகத்தின் சிற்பி மருத்துவர் ராமதாஸிடமோ அல்லது அதுக்கு பொழிப்புரை எழுதிவரும் கலைஞரிடமோ கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.
அரசியல் நாகரீகத்தப்பத்தி நாம புரிஞ்சுக்கோணும்னா முதல்ல மருத்துவர் ராமதாஸ்க்கு சமூகத்து மேல இருக்கற அக்கறைய தெரிஞ்சுக்கோணும். ஒன்னாயிருக்க வேண்டிய மக்கள ஜாதி சொல்லி பிரிச்சு வெச்சிருக்கற ஆதிக்க சக்திகளான தலித்துகளின் ஆதிக்கத்தை ஒழிக்கறதுக்கு போராடி வர்ற இவுரு, ஒடுக்கப்பட்ட சமூகத்தச் சேந்த  வன்னியரு, தேவரு, கொங்கு வேளாள கவுண்டரு, முதலியாரு, பிள்ளமாரு, நாயுடு, நாடாருன்னு இவிங்கள ஒருங்கிணைச்சதோடு சமூகத்துல மிகவும் பாவப்பட்ட ஜாதியான பார்பபனர்களயும் சேத்துகிட்டு ‘அனைத்து சமூகத்தின் பேரமைப்ப’ உருவாக்கி பல போராட்டங்கள செஞ்சு வர்றாரு.
இந்த தலித்துங்க இருக்காங்களே அவிங்களுக்கு பணத்திமிரும், ஜாதித்திமிரும் ரொம்ப அதிகங்க. தினம் ஒரு ஜீன்ஸ் பேண்ட், கூலிங்கிளாஸ்னு போட்டுகிட்டு மேற்குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள ஏமாத்தி ‘காதல் நாடக’ மூலமா திருமணங்கள நடத்தி அவிங்கள்ட்ட இருக்கற கொஞ்சுநஞ்ச சொத்தையும் கொள்ளையடிக்கறாங்கன்னு சொன்னாவரு இந்த மருத்தவரு. அதாவது அவிங்க பெண்களெல்லாம் ஜீன்ஸ் பேண்ட்டையும், கூலிங்கிளாஸையும் பாத்து ஏமாறராங்கன்னு சொன்னது இருக்கே, இதவிட இந்தப் பெண்கள் மானத்த கப்பலேத்த (சாரி...காப்பாத்த) வேறுயாராலும் முடியாது. ஆக, பெண்கள காப்பாத்தறதுகாக தருமபுரி நத்தம் காலனியில் வாழும் ஆதிக்க சக்திகளான தலித்துகளுக்கு எதிராக போர் தொடுத்தவரு இந்த மருத்தவர் ராமதாசு.
இதப்புரிஞ்சுக்காத சமூகத்தின் விஷ ஜந்துக்களான பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்த சமூக மருத்துவர எதுத்து கொஞ்சுங்கூட நாகரீகமே இல்லாம அவர்... இவர்னு ஏக வசனத்துல பேசுனாங்க.... இவிங்ககூட கலைஞரும் சேந்துகிட்டு விமர்சனம் செஞ்சாரு இது தப்பில்லீங்களா...?     
ஆனா, நம்ம சமூக மருத்துவர் ராமதசு கொஞ்சங்கூட கோபமேபடல. மாமபுல்லபுரத்துல அனைத்து ஜாதிவெறியர்களின் (அய்யய்யோ.. சமூகத்தவரின்னு படிங்க) மாநாடு நடத்தப்போ, தன்னையும் பாமகவையும் விமர்சனசெஞ்ச தலைவர்கள ரொம்பவும மரியாதையா அவனே... இவனேனு ஏகவசனத்துலதான் அன்போட பேசுனாரு. அவருக்கு முன்னால பேசின சமூகப் போராளி காடுவெட்டி குருகூட, குருவுக்கு மிஞ்சுன சிஷ்யனா நடந்துகிட்டாரு. ஆனா, திமுக தலைவரான கலைஞர இசையமைப்பாளருன்னு சொல்லவந்து கொஞ்சம் நாக்குபொறண்டதால ‘மோளம் அடிக்கிற சாதி’ன்னும், திராவிடர் கழக தலைவர் வீரமணியை மக்களுக்கு அறிவைக் கொட்டிக்கொடுப்பவர்னு சொல்லவந்து டங்க் சிலிப்பானாதால ‘கூட்டிக்கொடுப்பவர்’னும் நாகரீகமாத்தான் பேசுனாரு. இதைய மருத்துவர் இராமதாசும் ரசிச்சு சிரிச்சாருங்கறது வேற கத.
அப்படிப்பட்ட நாகரீகங்களுக்கு சொந்தக்காரான ராமதாசு தன்னோட குடும்ப திருமண விழாவுக்கு தன்னை கேலி செஞ்ச கலைஞரு, வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன் பலரையும் கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ படாம நேருலபோயி அழைச்சு தன்னோட நாகரீகத்த நிலைநாட்டுனாரு. திருமணத்துக்கு போன கலைஞரும் ராமதாசின் நாகரீகத்துல நெக்குருகி, அவரை ‘கெழுதகை நண்பர்’னு புளாங்கிதம் அடைஞ்சும், ராமதாசுக்கும் அவருக்குமான நட்ப விளக்கியும் தானும் நாகரீகத்தின் சிற்பிங்கறத நிரூபிச்சுட்டாரு.

ஆனா பாருங்க தலித் கட்சிய சேந்தவிங்கள மட்டும் இந்த திருமணத்துக்கு கூப்பிடுல இந்த ராமதாசு. ஆண்ட பரம்பரைன்னு சொல்றவனும், அடிமைப்பட்டு இருக்கறவனும் ஒன்னா இருக்க முடியாதுங்கற அரசியல் நாகரீகம் தெரியாதவரா இந்த மருத்துவர்..? இதப்போயி ஒரு குத்தம்னு சிலர் பேசறாங்க. கலைஞரும் ராமதாசும் இப்படி கொஞ்சிக்கறது அடுத்துவர்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கறதுக்கான அச்சாரம்தான்னு சொன்னதோட அரசியல் லாபத்திற்காக கலைஞர் இவ்ளோ கீழா போய்ட்டாரேன்னும் குதர்க்கவாதிங்க விமர்சனம் பண்றாங்க. அரசியல் நாகரீகத்துல இதெல்லாம் சாதாரணமப்பான்னு உட்டுட்டு போகாம, குத்தஞ்சொல்லி குசும்பு பண்ணாதீங்க.
          அப்பறம் அந்த திருமண ஜோடி அதாங்க ராமதாஸோட பேரன் - பேத்தி பேரென்னான்னு தெரியுங்களா...? ‘பரசுராமன் -’ஸ்ரீகாந்தி’ன்னு சுத்தமான தமிழ் பேரா வெச்சிருக்காரு. என்ன பேரக் கேட்டதும் மருத்துவர் ராமதாஸின் தமிழுணர்வு பொங்கிவருதா...?

திங்கள், 1 ஏப்ரல், 2013

வேண்டுதல் வேண்டாமை



-கோவன் மகன்

முன்னமாதிரி இப்பெல்லாம் என்னால முழுசா ஒரு செய்தி சொல்லவே முடியறதில்லீங். அடிக்கடி என்ர நாக்கு கொளறி மாத்தி மாத்தி சொல்லீப் புடுறேன். அது ஏதோ டங்க் பிறழ்ன்யாங்கற நோயா இருக்கலாம்ணு நெனெக்கிறேன். எது எப்படியிருந்தாலும் நம்ம கடமைய செஞ்சாக வேண்டியிருக்குங்கறதால, சில விசயங்கள உங்கள்ட்ட சொல்றேனுங்.
அண்மைல அந்த அதிர்ச்சியான செய்திய கேள்விப்பட்டதும் என்ர நெஞ்சே வெடிச்ச மாதிரியிருந்துச்சுங்க. பின்னென்னுங்க உலகத்தின் ஒப்பற்ற ஒரே சமாதானப் பொறா, சமாதானத் தூத்.. தூத்.. தூத்… தூதுவன் (கொஞ்சம் திக்குது அவ்ளோதாங்), மனிதநேய மாண்பாளர்னு அத்தனைக்கும் எடுத்துக்காட்ட இருந்த பால் தாக்ரே செத்துப் போயிட்டாருன்னு தெரிஞ்சதும் தூக்கம் தாளல்லீங்க (இல்லயில்ல..) துக்கம் தாளலங்க.

இத கேள்விப்பட்ட அமெரிக்க பிரதமர் மன்மோகன் சிங்கு (அய்ய்ய்யோ… இந்திய பிரதமர்னு மாத்திப் படிங்க) சோனியா காந்தினு எல்ல தலவலிங்களும் (அடச்சே) தலைவருங்களும் நேர்லயே போயி அந்த மகானுக்கு மரியாத செலுத்துனது மட்டுமில்லீங்க, அரசு மரியாதையோடு அடக்கம் பண்ணிட்டு வாந்தாங்க.
இந்த தேசத்தோட தந்தை காந்தினு நெரயப் பேரு சொல்றாங்க, ஆனா, என்னியப் பொருத்தவரைக்கும் தேசப்பிதாவோ கேசப்பிதாவோ அது தாக்ரேவாத்தான் இருக்கோணும். ஏன்னா, காந்தியாரு எப்பையுமே வன்முறைய தூண்டர மாதிரிதான் நடந்துக்குவாரு. அதுக்கு அடையாலமா கையில சிலம்பம் வெச்சுகிட்டு ரொம்பவும் மக்கள (அ)இம்சை செஞ்சவரு. ஆனா, இந்த பால் தாக்ரேவ பாத்தீங்கனா அப்படியே நேரெதிரா இருந்தவரு. எப்டின்னா பச்சரத்தம் குடிக்க வந்த ஓநாய் மாதிரி முகத்துல அப்டியொரு கொலவெறி (என்ன எளவுடாயிது? வரமுறயில்லாம ஸ்லிப்பாகுது.) பால்குடிக்கற பச்சப்புள்ள மாதிரி முகத்துல அப்படியொரு சாந்தமும், சமாதானமும், அமைதியும் குடிகெடுக்கற மாதிரியான (அடச்சே..) குடிகொண்டிருக்கற கருணைக்கடல்.
அடிப்பட்ட மனுசன் எறந்ததுக்கு நேர்ல போகாட்டியும் பரவால ஒரு எரங்கலத் தெரிவிக்கக்கூடா போகலியே இந்த மார்கண்டேயகட்ஜூ. இவுரு வேணா நீதியரசரா இருந்திருக்கலாம், இப்ப பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவோட தலைவரா இருக்கலாம். அதுக்காக ஒரு கேசப்பிதாவுக்கு இப்படியா அவமானத்த ஏற்படுத்தறது. இவுருகூட சேந்துகிட்டு முற்போக்குவாதிங்கன்னு சொல்ற பலரும் சேத்தவாரி எறக்கைற மாதிரி விமர்சிக்கறாங்க.
அப்படி என்ன அந்த மனுசன் (அதாங்க நம்ம தாக்ரே) என்ன தப்ப செஞ்சாரு? மக்கள்ட்ட இருக்கற ஒற்றுமையை வெட்டி சாய்க்கணும்னு (ச்சே..ச்சே..) வேற்றுமைய களையணும்னு அல்லும் பகலும் அயராம படுகொல செஞ்சாரு (ஏந்தான் இந்த நாக்கு இப்டி சதி பண்ணுதுனு தெரியலீயே.) அயராம பாடுபட்டவரு. இன்னுஞ் சொல்லப் போனா, இசுலாமியருங்கமேலதான் அவருக்கு ரொம்பபாசம். அவிஙகெல்லாம் ஆரோக்யமாவும், வீரமாவும் இருக்கோணுங்கறதுக்காக, திடுத்திப்புன்னு தன்னோட ஆட்களவெச்சு அடிக்கற மாதிரியும், வெட்றமாதிரியும் நாடுரோட்ல நாடகம் நடத்துவாரு. அந்த மாதிரி நேரத்துல தெரியாத்தானமா ஒருசிலர்மேல கத்திபட்டு கழுத்தறுந்து போயிருப்பாங்க. இது ஒரு குத்தமாங்?
அதே மாதிரி உலகமெலாம் இருக்கற தமிழர்கள மற்ற நாட்டுக்காரன் தாக்க வந்த எப்படி தப்பிக்கறதுன்னு தற்காப்புக் கலையெல்லாம் கத்துக் கொடுக்க நெனச்சாரு. வௌயாட்டுன்னா ஆங்காங்கே அடிபடறதுதான். ஆனாலும், தாக்ரேவோட நல்லெண்ணத்த புரிஞ்சுக்காத நம்மாளுங்க, தாக்றாங்க, தாக்றாங்கன்னு மும்மைலயிருந்து ஓடியாந்துட்டாங்க. இது யாரோட குத்தம் நீங்களே சொல்லுங்.
இதக்கூட விடுங்க மும்பைல இருக்கற தொழிற் சங்கவாதிங்க அங்க தொழில் செய்யவந்த அப்பாவி அம்பானி போன்ற ஆள்களுக்கு தொந்தரவு கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு கொதிச்சுப் போன நம்ம தாக்ரே மும்பைல இருக்கற ஏழ, பாழைங்க வேலவாய்ப்புக்கு என்ன பண்ணுவாங்கன்னு தொலைநோக்குப் பார்வையோடப் போயி தொழிற்சங்க ஆட்கள தட்டிக் கேட்டாரு.
என்ன ஒன்னு தட்டும் போது கொஞ்சம் பலமா தட்டிட்டாரு. அதனால கொஞ்சப்பேரு போய் சேந்தட்டாங்க. ஆனா இன்னைக்கு நெலம என்னன்னா எத்தன மொதலாளிங்க அவுரு கட்சிக்கு கப்பம் கட்டிட்டு இருக்கறாங்க தெரியுங்களா? அப்படியெல்லாம் இருக்கறதனாலதான் கட்சி நடத்த முடியுது. அவுரு பெத்தடுத்த மக்களுக்காக உழைக்க முடியுது. இப்பச் சொல்லுங்க தாக்ரேவுக்கு இரங்கல் தெரிவிக்காறது சரியா? தவறா?
என்னயிருந்தாலும் இந்த மனுசனுக்கு இத்தன தைரியம் கூடதுங்க சென்டரலு, ஸ்டேட்டுன்னு வித்தியாசமில்லாம பயந்து நடுங்கற ஒரு பெரிய்ய்ய்ய ஆள நேர்மையா விமர்சனம் செஞ்சதிருக்கே உள்ளபடியே கொஞ்சம் பலமாவே பாராட்டலாம். இப்ப நாஞ்சொல்லிட்டிருக்கற பாராட்ட வேண்டிய மனுசன் நீதியரசர் மார்கண்டேய கட்ஜூதான்.
------------------------
     உண்மையிலேயே காங்கிரஸ்காரங்க எம்புட்டு நல்லவிங்க தெரியுங்களா? அவிங்க மாதிரி மக்கள கழுத்த நெறுச்சு கொல்றவிங்க (போச்சு போச்சு மறுபடி டங்க் பிறழ்ன்யா ஆரம்பிச்சுரு) மக்கள காலத்துக்கும் நேசிக்கறவிங்க யாருங்கிடையதுன்னு நான் அடிச்சு சொல்றேனுங்க. எப்படின்னு கேக்கறீங்களா?
அம்மா-அப்பா, ரெண்டோ மூனோ கொழந்தீங்க இருக்கற ஒரு குடும்பத்துக்கு மாசத்துக்கு எம்புட்டு செலவாகும்னு நெனைக்கிறீங்க? ஒரு அஞ்சாயிரம் இல்லைனா பத்தாயிரம் அதுவுமில்லீனா இருவதாயிரம்னு நீங்க எப்படிவேணா நீங்க உங்க தகுதிக்கு ஏத்தமாதிரி கணக்குப் போடுங்க. ஆனா, பாருங்க நீங்க நம்பவே முடியாது அஞ்சுபேரு கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆகுற செலவுன்னு பாத்திங்கனா அதிகபட்சம் 600 ரூபாதாங்க செலவாகும்.

என்ன நம்ப முடியலீங்களா? பொன்னி, சம்பா, அய்யாரு எட்டு, அய்யாரு இருவதுன்னு நாம சாப்படற அரிசியோட வெல கிலோ ஒத்த ரூபா. இங்க வௌயற அத்தன காய்கறிகளும் அதே ஒத்த ரூபா. இதுதவிர மளிக சாமனுங்க ரெண்டு ரூபா, மூனு ரூபா. அதவிட முக்கியமா ஒரு கேஸூ  50 ரூபாய்க்கு கெடைக்கறப்போ 600 ரூபாயே அதிகம்னு தோணுமா? தோணாதுங்களா?
என்னடா இவன் தண்ணிய கிண்ணியப் போட்டுகிட்டு ஔறானோன்னு நீங்க நெனைக்க வேணாங்க. ஒரு குடும்பத்த நடத்தறதுக்கு மாசம் 600 ரூபாயே போதும்னு சொன்னது டில்லியோட முதலமைச்சரா இருக்கற ஷீலா தீட்ஷித் அம்மையாருதான்.  சும்மா போறபோக்குல இந்த கருத்த அவிங்க சொல்லல்ல. "அன்னசிறீ யோஜனா'ங்கற, உணவு பாதுகாப்பு திட்டம் தொடக்கவிழாவுலதான். அந்த அம்மையார் பேசியிருக்காரு.
அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானதுன்னு சொன்னதிருக்கே அத்தனையும் தஞ்சாவூரு கோயில் கல்வெட்டுல பொறிக்க வேண்டிய பொன் மொழிகள். இப்ப சொல்லுங்க, தண்ணிப் போட்டுட்டு ஔருன்னது யாருன்னு?

புதன், 19 செப்டம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணெய்


ஒரு கண்ணில் சுண்ணாம்பு...?

சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது தமிழக மக்களை பதறடித்து வருகிறது. 
அண்மையில் சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்து நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தமிழக மக்களை துடிதுடிக்க வைத்தது.
இந்த கொடூர சம்பவத்திற்கு அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி தனது பள்ளி வேனின் சக்கரத்திலேயே சிக்கி உயிரிழந்தாள். இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அடுத்து சில நாளிலேயே சென்னையில் பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு 4ம் வகுப்பு மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். 
இந்தப் பள்ளியில் திரைப்பட இயக்குநர் மனோகர் என்பவரின் மகன் ரஞ்சன் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவம் நடந்த காலையில் பள்ளிக்குள்ளேயே உள்ள நீச்சல் குளத்தில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இச்சம்பவமும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மற்ற இரண்டு பள்ளிகளில் நடந்த சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பெரு வித்தியாசத்தை சமூக அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் விமர்சித்திருப்பார்கள். 
பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி இறந்ததும் செய்தி அறிந்து பொது மக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுக்கை இட்டபோது அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பள்ளி நிருவாகம் தடுத்துள்ளது.
காவல்துறையினர் வந்தபின் இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர். உதவியாளர், விளையாட்டு ஆசிரியர், துப்புரவு பணியாளர் என 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால், பள்ளி நிருவாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
நீச்சல குளத்தில் இறந்த மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை, வலிப்பு வந்துவிட்டது, இதனால்தான் இறந்து விட்டான் என்று பொறுப் பற்ற தன்மையில் பேசிய பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஜியோன் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில், தானாக முன்வந்து வழக்குப்போட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன் பின்னரே அரசு சுதாரிப்படைந்து கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ஏன் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் போடப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் ஜியோன் பள்ளி நிருவாகியான தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் முழுக்க முழுக்க அஜாக்கிரதையே காரணம் என்று காவல்துறையே கூறியுள்ளது. அப்படி உள்ள நிலையில் படு சாதாரணமான கவனக்குறைவு காரணமாக என்ற பிரிவில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கொலை வழக்குப் போடக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். 
இச்சம்பவங்களுக்கிடையே மற்றொரு செய்தி யையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளையாட்டரங்கம் இடிந்து விழுந்து 10தொழிலாளிகள் பாலியாகினர். அந்த சம்பவத்திற்கு காரணம் அக்கல்லூரியின் நிருவாகியான ஜேப்பியார்தான் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத் தில் அப்பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபியோ மற்ற நிருவாகிகளோ யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்கள் மீது வழக்கும் போடப்படவில்லை. இது என்ன வகை நீதி என்று புரியவில்லை. திருமதி ஒய்ஜிபியின் நேரடி கண்காணிப்பில்தான் இப்பள்ளி நிர்வாகம் நடக்கிறது. மற்ற தனியார் பள்ளிகளில் எல்லா மக்களும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதுபோல் இப்பள்ளியில் சேர்த்துவிட முடியாது. இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்கும் ‘உயர்’ குடிமக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டு மறைமுகமாக உயர்குடிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு பின்பற்றி வந்ததுதான் இந்த பள்ளியின் நிருவாகம். இப்பொழுது யாரால் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த முடியுமோ அவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என்ற நடைமுறை. 
அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட சற்று தாமதமானாலும் கூட டிசி கொடுத்து விடுவோம் என்று மிரட்டலும், கடுமையான கட்டுப்பாடும், எதற் கெடுத்தாலும் பணம் என்கிற பிடுங்கல் இதுதான் அப்பள்ளியின் நிருவாகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அப்பாவி மாணவனை அநியாயமாக சாக விட்டுள்ளனர் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
இந்நிலையில் திருமதி ஒய்ஜிபி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசும் காவல்
துறையும் தயங்குவதன் காரணத்தை மிக எளிதாக அறிந்து விடலாம். சமச்சீர் கல்வியை கைவிடுவதற்கு இன்றைய தமிழக அரசு முயன்ற போது அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினராக முதல்வரால்  பரிந்துரைக்கப் பட்டவர்தான் இந்த திருமதி ஒய்ஜிபி. என்றழைக்கப்படும் ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. பணக்காரர்களுக்காக பள்ளியை நடத்தும், அதுவும் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டத்தைப் பின்பற்றாத ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியை எப்படி இந்தக் குழுவில் சேர்க்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின என்பது நினைவிருக்கலாம். 
ஆக, முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுதான் நடவடிக்கை எடுக்காமல் விட்டதற்கான காரணமாக இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. 
பெருவாரியான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் சிறப்பாக பணியாற்றிவரும் தமிழக முதல்வர் மீது இம்மாதிரியான குற்றச் சாட்டு எழுவதற்கு காரணமாக அமைந்துவிட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி நிருவாகத்தின் மீது மற்ற கல்வி நிருவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் கடுமையான நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும் மறு கண்ணிற்கு சுண்ணாம்பு தடவியது போலாகிவிடும்.