வியாழன், 19 ஜனவரி, 2012

காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில்,,,




இந்தப் பதிவை கொஞ்சம் தாமதமாகத்தான் தருகிறென். இருந்தாலும் அவசியமானது என்பதால் இந்த இடுக்கையை வெளியிடுகிறேன்.

நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய்கிழியப் பேசிவந்த காங்கிரஸாருக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் உண்மையான பலம். காமராஜரோடு காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு மூலம்.



தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட சரியாக சொல்லிவிடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.



ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம்.



காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).



தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள்.



இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பி டுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.



இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநக ராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பிடிக்கவில்லை. மொத் தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட் சிக்குக் கிடைத்துள்ளனர்.



அதை விடக் கேவலமாக கொடி காத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கி ரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.



அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவி யைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத் துள்ளது.



இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில் தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த் தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது.



அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மை யில் எந்தப் பலனும் கிடைக்க வில்லை என்பதை காங்கிர ஸாரே ஒத்துக் கொள்வார்கள்.



இந்தத் தேர்தலின் மூலம் திராவிடக் கட்சிகளான திமுக வுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து விட்டோம் என்பதுதான்.



தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை.



தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத் தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.



தமிழகத்தின் நதி நீர்ப்பிரச்சினை யாகட்டும், வேறு எந்தப்பிரச்சினை யாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.



இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத் திற்கு உதவக்கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.



இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெந்ததும் வேகததும்...










ன்னன்னே தெரிலீங்க இந்த பத்திரிக்கக் காரங்களும், எதிர்கட்சிக்காரங்களும் என்னமோ நாடே அழிஞ்சு போறாமாதிரி கூப்பாடு போடறாங்க. வேறொன்னுமில்லீங்க, நம்ம முதல்வரு பஸ்ஸூக் கட்டணம், பால்விலை, மின்கட்டணம் இதையெல்லாம் ஒசத்திட்டாங்கன்னு குய்யோ முய்யோ கத்தறாங்க. இது எந்தவிதத்துல நாயமுன்னு தெரிலீங்க.


பின்ன என்னங்க ரயில்வே துறையின் வருமானம் கொறஞ்சிருச்சுன்னு அந்தத்தொறை அமைச்சரு வெசனப் பட்டிருக்கிறாரு. இந்த வெசயத்த கேள்விப்பட்ட நம்ம முதல்வரு சரி பஸ்ஸூல அதிகமான மக்க பயணம் செய்றாங்க. அவிங்கள்ல கொஞ்சம்பேத்த ரயிலுக்கு மாத்தி விட்டம்னா என்னான்னு ரோசன பண்ணியிருக்காங்க. செரி கொஞ்சப்பேரு ரயில்ல போங்கன்னு சொன்னா கேக்கறளவுக்கு நம்மாளுங்களுக்கு கருணையுள்ளம் கொண்ட நம்ம முதல்வரம்மா அளவுக்கு பக்குவம் கெடையாது.


அதனாலதான் ரொம்ப வேதனையோடவே பஸ்ஸூக் கட்டணத்த அதிகரிச்சாரு. அதுக்குப் பிறகுதான் தமிழ்நாட் டுல மின்சார ரயில் மொதக்கொண்டு எல்லா ரயில்லையும் மக்கள் கூட்டம் அல மோதுது. இந்த விசியத்த புரிஞ்சிக்கறளவுக்கு மத்த கச்சிக்காறாங்களுக்கு ஏழாம் அறிவு கெடையாதுனால தேவையில்லாம போராட்டம்னு கௌம்பிட்டாங்க.
அதேமாதிரிதாங்க பால் வெலையேத்தமும். ஹெரிட் டேஜ், ஆரோக்யா, அம்ருதா போன்ற ஏழை பால் கம்பெனிங்க வருமானம் பெருகனும்னா ஆவின் பால் விற்பனை குறையோணும். எல்லோரும் மத்த பாலுங்களையும் பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் நம்மாளுங்க கேக்க மாட்டாங்க. அதுககு தனியா ரூம் போட்டு யோசிச்ச நம்ம முதல்வரம்மா, ஆவின் பால் வெலைய ஏத்துனா, மத்த கம்பேனி பாலுங்க விற்பன தானா ஒசரும்னு முடிவு செஞ்சாங்க. இதெல்லாம் தப்புன்னு எதிர்கச்சிங்க சொல்றறது எந்தவிதத்துல நாயம்னு ஒரு கேனத்தனாமான வெழக்கத்த சொன்ன எப்படியிருக்கும்....? என்னமோ போங்க, உண்மய சொன்னா, அரசுக்கெதிரா ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் போராட்டத்திலீயா குதிக்கப் போறாங்க...? போங்க சார் குடும்பத்தோட நிம்மதியா டீவில நாடகத்தப் பாருங்க. ஏன்னா அதுதான் நம்ம நாட்டுக்கும், வீட்டுக்கும் ரொம்ப அவசியம்.


-------------------------------------
விங்களுக்கு ஏந்தான் இந்த வேலைன்னே தெரியல? யாருன்னு கேக்கிறீங்களா, இந்த கூடங்குளத்து மக்களத்தான் சொல்றேங்க. கொஞ்சமா வது மனிதாபிமானங்கறது இருக்கோணுங்க. சுமார் 13 ஆயிரங்கோடி ரூபா செலவழிச்சு மின்சார உற்பத்திக்கு தயாரா இருக்குற அணுஉலையை வேண்டாம். இந்த அணுஉலை வெடிச்சா மக்களோட உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்துன்னும், அணுஉலைங்க வேல செய்யுதோ இல்லீயோ, அதக் காட்டிலும் அந்த உலைங்கள காப்பாத்தறதுதான் பெரிய பிரச்சனைன்னும், தேவையில்லாம நம்மாளுங்க பொரளிய கௌப்பி விடுறாங்க.


மக்களோட இந்த பயத்த போக்கறதுக்காகவே இந்தியா வின் அணு மெக்கானிக் அப்துல் கலாம (மன்னிச்சிருங்க டங்க் சிலிப்பாயிருச்சு. எல்லா தேச பக்தர்களும் அணு விஞ்ஞானின்னு கூப்டறதாலா, வேற வழியில்ல. அதனால, அப்படியே நீங்களும் மாத்தி படிங்க.) கூடங்குள அணுஉலைய ஆய்வு செய்ய அனுப்பிச்சது மத்திய அரசு. இந்த விசியத்துக்கு அப்துல் கலாம அரசாங்கம் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் அவரு ரொம்ப நேர்மையானவரு. எந்த வம்பு தும்புக்கும் போகதவரு.
அதாவது, குஜராத்துல இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட முசுலீம்கள மோடி அரசு கொன்னு குவிச்ச போது இவரு குடியரசு தலைவரா இருந்தாரு. அந்த சம்பவத்த கண்டிக்கறதுகூட நாட்டுக்கு செய்யற துரோகம்னு நெனச்சு வாயே திறக்கல. அந்தளவுக்கு தேசாபிமாணி. நாட்ல எங்கயாவது ஒரு மூலைல போராட்டமோ, புரட்சியோ வெடிச் சரக்கூடாதுங்கற சமூக அக்கறையோடு...! நாட்டுல இருக்கற பள்ளிக்கூடங்க, கல்லூரிங்களுக்கு போயி (முக்கியமா அழுக்குப் படிஞ்ச அரசு பள்ளிகள்ல மட் டும் பேசமாட்டாரு. ஏன்னா இந்த நாட்டோட தேச விரோதிங்க அங்கதானே படிக்கறாங்க. அதாங்க ஏழைங்க) இந்தியா 2020ல வல்லரசாயிரும்னு பேசிட்டு வர்றாரு.


நாடு வல்லரசாகறதுக்கு என்ன செய்யணும்னு கேட்டா எல்லாரயும் கனவு காணச் சொன்ன உத்தமரு. இதனால பல கல்விச் சாலைங்கள்ல பல மாணவர்கள் தூக்கத்துலேயும், பல பெற்றோர்கள் தூக்குலேயும் தொங்கறதுக்குக் காரணம் இவருடைய தத்துவம்தான் காரணம். அப்படிப்பட்டவரு இந்த அணுஉலையப் பத்தி என்னசொல்றாருன்னா, இந்த அணு உல மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட உருவாக்கப்பட்டிருக்கு அதனால இந்த உலைனால எந்த பாதிப்பும் ஏற்படாதுன்னு அடிச்சு சொல்லிட்டாரு.


நல்ல விசயந்தானுங்க. அணு மெக்கானிக்கே (சா...ரிங்ங்ங்க) அணு விஞ்ஞானியே சொன்ன பிறகு இந்த அணு உலைங்க பாதுகாப்பத்தா இருக்கும். அதனால நாட்டோட வளர்ச்சியில முக்கிய பங்கு வகிக்கப்போற இந்த அணுஉலைங்கள மூட வேண்டும்னு போராடறத விட்டுட்டு நல்ல பாதுபாப்போட இருக்கற இந்த உலைங்கள அப்படியே பேத்தேடுத்துட்டுப் போயி நாட்டோட தலைநகரான டெல்லியில வெச்சுக்கோங்கன்னு போராடலாம். என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களே...?