ஞாயிறு, 14 டிசம்பர், 2014

ஆப் கி பார்... மோடி சர்க்கார்...

வேண்டுதல் வேண்டாமை...

நாலு விசியத்த நாலுபேத்துக்கு புரியறமாதிரி நறுக்குனு சொல்லிப்பழகு. சும்மா வழவழா கொழகொழான்னு ஒழறிட்டிருக்காதன்னு நீங்க எத்தன தடவ சொன்னாலும் என்ற மரமண்டைக்கு ஏறவே மாட்டேங்குதுங்க. எதுய சொன்னாலும் கொழப்பமாவே சொல்லி பழகிப்போச்சு. எல்லா இந்த எழவெடுத்த குதர்க்கவாதிங்க கூட வெச்சிகிட்ட சகவாசந்தான் காரணம். நாட்ல எந்த நல்ல விசியம் நடந்தாலும் நொட்ட சொல்றதே இவிங்க பொழப்பு.  
அப்படித்தாங்க பிரதமர் மோடியும், அவரு கட்சிய சேந்த கூட்டாளிங்களும் அங்கங்க கூடிநின்னகிட்டு, அங்க கூட்டு, இங்க பெருக்குனு சொல்லிட்டிருந்தத கேட்டதும், நாங்ககூட இந்த பிரதமருக்கு கணக்குப் பாடத்துல ரொம்ப ஆர்வம் வந்திருச்சுனு தானுங்க மொதல்ல நெனச்சேன். அவரோட பத்திரிகை பங்காளிங்களும் அப்படித்தானுங்க அப்படி கூட்டுனாரு, இப்படி பெருக்கினாருன்னு செய்தியாக போட்டுத் தள்ளுனாங்க.
என்னடா கணக்குப் பாடத்த சிலேட்டுலேயும், நோட்டுப் புத்தகத்திலேயும் போடாம பெரிய பெரிய குச்சிய வெச்சுகிட்டு தரையில போடறாங்களே. ஒருத்தருகூட விடையென்னனு சொல்லலையேங்கற கேள்வி என்ற யோசனைக்கு அப்பவே எட்டுச்சு. அப்பறந்தான் தெரிஞ்சது, அவிங்க போடறது கணக்கப் பாடமில்லையாம். இந்தியாவ தூய்மை செய்யற திட்டம்னு...?  
அதுக்குகூட ஏதோ ‘சமச்சா பாரம்’னு வேற பேரு சொல்றாங்க.  அய்யய்யோ... அத ‘ஸ்வச்சா பாரத்’னு சொல்லனுங்களா...? சரிவுடுங்க... இந்த எழவெடுத்த பேரா முக்கியம். அதுல இருக்கிற விசயந்தானுங்களே நமக்கு வேணும். இந்தியாவ தூய்மைப்படுத்தறது எவ்ளோ பெரிய காரியம். அதை நம்ம பிரதமரா இருக்கற மோடியே செய்றாருங்கறப்ப அதைய பாராட்டுனுமா இல்லையா..? அதவுட்டுட்டு  வழக்கம் போலவே இந்த குதர்க்கவாதிங்க கிண்டல் பண்றாங்க.
மோடி எத சொன்னாலும், செஞ்சாலும் எகத்தாளமா பேசறதே இவிங்க பொழப்பு. அப்படித்தான், குஜராத்துல கஷ்ப்பட்டுகிட்டிருந்த இசுலாமியர்களுக்கு நன்மை செய்யணும்னு, ‘அகோரி’ அவதாரமெடுத்து வரம் கொடுத்தாரு. அதைக்கூட கிண்டல் பண்ணுனவிங்க, இதவுட்ருவாங்களா...?  
ஆமாங்க, தூய்மை இந்தியாவ எப்படி உருவாக்குறதுன்னு அவிங்ககிட்ட தெரியாத்தானமா கேட்டுப்புட்டேனுங்க. அதுக்கு, கொஞ்சம் தொடப்பக்கட்ட... நெறயா நடிப்பு... ரொம்ப நெறயா கேமரானு... நக்கலா பதில் சொல்றாங்க. அதோட விட்டாங்களா, தூய்மை இந்தியாங்கறது வேறொன்னுமில்லீப்பா, சுத்தமா இருக்கற இடத்துக்குப் போயி தொடப்பக்கட்டயால தடவிக்காட்டறதுதான்னு குசும்பு பேசறாங்க. 

   ஏனுங்க, நாட்ட சுத்தமா வெச்சுகணும்னு மோடி நெனைக்கிறது தப்பா...? நானே அதுல போயி கலந்துக்கலாம்னு இருக்கேன். அதப்போயி கிண்டல் பண்றீங்களேன்னு... திருப்பிக் கேட்டேன். அதுக்கு அவிங்க நெறய போட்டவ காட்டி,  ஏம்பா பிரதமரும் அவரோட கட்சி சகாக்களும் சுத்தப்படுத்தற எடத்துல கொஞ்சங்கூட குப்பையே இல்லையே இது போங்காட்டம்னு உன்ற மூளைக்கு எட்டலீயான்னு...? கேட்கிறாங்க.
அப்படியே குப்பய கூட்டிப் பெருக்கினதா வெச்சிகிட்டாலும், ஒருத்தனாவது குப்பைய கையில எடுத்தானுங்களா...? கார்ப்பரேஷன் குப்ப வண்டி ரோட்டுல போனாலே மொக்கத்த சுழிச்சுகிட்டு, மூக்கப்பத்திகிற இவனுங்க எப்படிபா நாட்ட சுத்தப்படுத்துவனுங்கனு கொஞ்சம் சத்தமாவே கேட்கிறாங்க. 
இந்த கேள்வி அந்த காவிக்கட்சிக்காரங்க காதுல விழுந்திருக்கும். ஒடனே இவிங்களுக்கு ரோசம் வந்திருக்கும். அதனால, சாக்கடைல எறங்கி சுத்தப்ப படுத்துவாங்களோன்னு நானும் நெனச்சேன். அந்த எண்ணத்துல வண்டி வண்டிய குப்பையள்ளி போட்டுட்டு, சுத்தப்படுத்த போறம்னு அவிங்க முடிவுபண்ற எடத்துல முன்னமே குப்பைய கொட்டிட்டு, மறுநாளு அந்த எடத்த சுத்தப்படுத்தறம்னு போஸ் கொடுக்கறாங்க. 

அப்பறம் இன்னொன்னு அந்த குதர்க்கவாதிங்க சொல்றாங்க, நாட்ட தூய்மை படுத்தறம்னு இவனுங்க காட்டுன பிலிம்க்கு கோடிக்கணக்கான ரூபாய செலவு செய்றானுங்க. ஆனா, இன்னைக்கு மனுசன் பேண்டத மனுசனே சுமக்கற கொடுமய மாத்தறதுக்கோ, அல்லது அதப்பத்தி வெக்கப்படுறதுக்கோ இவனுங்களுக்கு துப்புகிடையாது. முடிஞ்சா அந்த வேளைய ஒரேஒரு தடவ பாக்கசொல்லு. அப்ப நம்பறோம் இவனுங்க  நெசமாலுமே இந்தியாவ தூய்மை படுத்தறானுங்கன்னு.  
அதோடு விட்டாங்களா, அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர்-6ந் தேதி பாபர் மசூதிய இடிச்சு கலவர நாளா மாத்தின மாதிரி, காந்தியார் பிறந்தநாளான அக்டோபர்-2ந் தேதிய ‘ஸ்வச்சா பாரத்’னு மாத்தி குப்பைய கொட்றானுங்கன்னு என்னன்னமோ சொல்லி என்னைய ‘சுத்தமா’ குழப்பிட்டாங்க இந்த குதர்க்கவாதிங்க. ஆக மொத்தத்துல, இவனுங்க  கூட்டல் பெருக்கல் கணக்கப்பாத்த, மோடி சர்க்கார்... ஆப் கி பார்... இப்படியே போனா பிஞ்சு போகும் வௌக்குமார்னு தான் சொல்லத் தோணுது... 
-------------
ல்லவரு... வல்லவரு... நாட்டுக்காக தெனமும் ஒழச்சு, ஓடா தேஞ்சவரு... தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் ஒரு பிரச்சனைனா ஓயாம குரல் கொடுப்பவரு... ஆமாங்க, தமிழ்நாட்டுக்கு தண்ணீ தரமாட்டேன்னு கர்நாடகா சொன்ன போது, அத கண்டிச்சு போராட்டம் செஞ்சவரு... பெரியாறு அணைப் பிரச்சனைல கேரளா சண்டித்தனம் செஞ்சபோது அதையெதுத்து பேரணி போனவரு... தமிழக மீனவர்கள் சிங்களப் படையால கொல்லப்படும் போதும், தாக்கப்படும் போதும் கொஞ்சுமும் பொறுக்கமாட்டாம தமிழர்களை ஒருங்கிணைச்சு சிங்கள அரசுக்கு எச்சரிக்க விட்டவரு... (ஸ்..ஸ்...ஸ்...ஸ்... யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே) இப்படி தன் வாழ்க்கையவே மக்களுக்காக அர்ப்பணிச்சவரு சமூகப் போராளி ரஜினிகாந்த் (ஆவ்... எவன்டா அது... தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பறது). 
இப்படி எந்தவித சுயநலமில்லாம வாழ்ந்திட்டிருக்கற ரஜினிங்கற மகத்தான புரட்சியாளன் தமிழ்நாட்டின் முதல்வரா வரணும்னு அவரின் புதிய ஜால்ராக்களான அமீரும், சேரனும் கேட்டுகிட்டதுல என்னத் தப்புன்னு நாங்கேக்கறன்.

அவரு இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செஞ்ச நன்மைகள் ஒன்னா ரெண்டா. கிட்டத்தட்ட 35வருஷத்துல 150 படங்கள்ல நடிச்சிருக்காரு. நாட்டின் முன்னேற்றத்திற்கு தன்னோட திரைப்படத்தின் மூலமா  எவ்ளோ பெரிய தத்துவார்த்த சிந்தனைகள வெளிப்படுத்தினவரு. குறிப்பா பெண்களின் முன்னேற்றத்திற்கு, சொன்னது இருக்கே, தஞ்சாவூரு கோயில் கல்வெட்டுல செதுக்கி வெச்சு பாதுகாக்க வேண்டிய தத்துவங்கள். 
பொம்பளனா பொறும வேணும், அவசரப்படக்கூடாது... அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது... அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது... கட்டுப்பாடு வேணும், இப்டி கத்தக்கூடாது... பயபக்திய இருக்கணும் இப்டி பஜாரித்தாணம் பண்ணக்கூடாது... மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்... அதிகமா ஆசப்படற ஆம்பளயும்... அதிகமா கோபப்படற பொம்ளயும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு சொல்லி புதிய பிற்போக்கு வரலாற படச்ச வரு (மன்னிக்கணும் முற்போக்கானு படிங்க) இந்த ரஜினி.
அதுமாட்டுமா, சினிமாவுல நடிச்சு சம்பாதிச்ச பணம் கெடுதலானதுன்னு தெரிஞ்சு  போயி, அந்தப்பணம் தமிழ்நாட்டுல இருக்கக்கூடாதுன்னு பெங்களுரு, அய்தராபாத்துனு பல முக்கியமான இடங்கள்ள முதலீடு செஞ்சிருக்கற தொலைநோக்குப் பார்வைனு அவரு முதல்வராகறதுக்கு எவ்ளவோ தகுதியிருக்கு. அதனால அடுத்த ரெண்டு மூனு வருஷத்துல தான் முதல்வராகற மதிரியென்ன இந்திய பிரதமரே ஆகறமாதிரி படத்த எடுத்து, அதிலும் பெண்களில் முன்னேற்றத்திற்கு ஏதுவான தத்துவங்களை சொல்ல முயற்சி செய்வேன்னு உங்களின் புதிய ஜால்ராக்களான அமீருக்கும், சேரனுக்கும் புரிய வைங்க ரஜினி.
-------------------
சுமேரியர் நாகரீகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், திராவிடர் நாகரீகம்னு உலகத்தில் எத்தனையோ நாகரீகங்களைப் பத்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். இப்போ தமிழ்நாட்ல புதுசா வளர்ந்திட்டிருக்கற அரசியல் நாகரீகத்தப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுங்களா...?
அப்படி உங்களுக்கு தெரியலைனாலோ, அதப்பத்தி நீங்க கேள்விப்படலைனாலோ கவலப்படாதீங்க. அரசியல் நாகரீகத்தின் சிற்பி மருத்துவர் ராமதாஸிடமோ அல்லது அதுக்கு பொழிப்புரை எழுதிவரும் கலைஞரிடமோ கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.
அரசியல் நாகரீகத்தப்பத்தி நாம புரிஞ்சுக்கோணும்னா முதல்ல மருத்துவர் ராமதாஸ்க்கு சமூகத்து மேல இருக்கற அக்கறைய தெரிஞ்சுக்கோணும். ஒன்னாயிருக்க வேண்டிய மக்கள ஜாதி சொல்லி பிரிச்சு வெச்சிருக்கற ஆதிக்க சக்திகளான தலித்துகளின் ஆதிக்கத்தை ஒழிக்கறதுக்கு போராடி வர்ற இவுரு, ஒடுக்கப்பட்ட சமூகத்தச் சேந்த  வன்னியரு, தேவரு, கொங்கு வேளாள கவுண்டரு, முதலியாரு, பிள்ளமாரு, நாயுடு, நாடாருன்னு இவிங்கள ஒருங்கிணைச்சதோடு சமூகத்துல மிகவும் பாவப்பட்ட ஜாதியான பார்பபனர்களயும் சேத்துகிட்டு ‘அனைத்து சமூகத்தின் பேரமைப்ப’ உருவாக்கி பல போராட்டங்கள செஞ்சு வர்றாரு.
இந்த தலித்துங்க இருக்காங்களே அவிங்களுக்கு பணத்திமிரும், ஜாதித்திமிரும் ரொம்ப அதிகங்க. தினம் ஒரு ஜீன்ஸ் பேண்ட், கூலிங்கிளாஸ்னு போட்டுகிட்டு மேற்குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள ஏமாத்தி ‘காதல் நாடக’ மூலமா திருமணங்கள நடத்தி அவிங்கள்ட்ட இருக்கற கொஞ்சுநஞ்ச சொத்தையும் கொள்ளையடிக்கறாங்கன்னு சொன்னாவரு இந்த மருத்தவரு. அதாவது அவிங்க பெண்களெல்லாம் ஜீன்ஸ் பேண்ட்டையும், கூலிங்கிளாஸையும் பாத்து ஏமாறராங்கன்னு சொன்னது இருக்கே, இதவிட இந்தப் பெண்கள் மானத்த கப்பலேத்த (சாரி...காப்பாத்த) வேறுயாராலும் முடியாது. ஆக, பெண்கள காப்பாத்தறதுகாக தருமபுரி நத்தம் காலனியில் வாழும் ஆதிக்க சக்திகளான தலித்துகளுக்கு எதிராக போர் தொடுத்தவரு இந்த மருத்தவர் ராமதாசு.
இதப்புரிஞ்சுக்காத சமூகத்தின் விஷ ஜந்துக்களான பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்த சமூக மருத்துவர எதுத்து கொஞ்சுங்கூட நாகரீகமே இல்லாம அவர்... இவர்னு ஏக வசனத்துல பேசுனாங்க.... இவிங்ககூட கலைஞரும் சேந்துகிட்டு விமர்சனம் செஞ்சாரு இது தப்பில்லீங்களா...?     
ஆனா, நம்ம சமூக மருத்துவர் ராமதசு கொஞ்சங்கூட கோபமேபடல. மாமபுல்லபுரத்துல அனைத்து ஜாதிவெறியர்களின் (அய்யய்யோ.. சமூகத்தவரின்னு படிங்க) மாநாடு நடத்தப்போ, தன்னையும் பாமகவையும் விமர்சனசெஞ்ச தலைவர்கள ரொம்பவும மரியாதையா அவனே... இவனேனு ஏகவசனத்துலதான் அன்போட பேசுனாரு. அவருக்கு முன்னால பேசின சமூகப் போராளி காடுவெட்டி குருகூட, குருவுக்கு மிஞ்சுன சிஷ்யனா நடந்துகிட்டாரு. ஆனா, திமுக தலைவரான கலைஞர இசையமைப்பாளருன்னு சொல்லவந்து கொஞ்சம் நாக்குபொறண்டதால ‘மோளம் அடிக்கிற சாதி’ன்னும், திராவிடர் கழக தலைவர் வீரமணியை மக்களுக்கு அறிவைக் கொட்டிக்கொடுப்பவர்னு சொல்லவந்து டங்க் சிலிப்பானாதால ‘கூட்டிக்கொடுப்பவர்’னும் நாகரீகமாத்தான் பேசுனாரு. இதைய மருத்துவர் இராமதாசும் ரசிச்சு சிரிச்சாருங்கறது வேற கத.
அப்படிப்பட்ட நாகரீகங்களுக்கு சொந்தக்காரான ராமதாசு தன்னோட குடும்ப திருமண விழாவுக்கு தன்னை கேலி செஞ்ச கலைஞரு, வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன் பலரையும் கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ படாம நேருலபோயி அழைச்சு தன்னோட நாகரீகத்த நிலைநாட்டுனாரு. திருமணத்துக்கு போன கலைஞரும் ராமதாசின் நாகரீகத்துல நெக்குருகி, அவரை ‘கெழுதகை நண்பர்’னு புளாங்கிதம் அடைஞ்சும், ராமதாசுக்கும் அவருக்குமான நட்ப விளக்கியும் தானும் நாகரீகத்தின் சிற்பிங்கறத நிரூபிச்சுட்டாரு.

ஆனா பாருங்க தலித் கட்சிய சேந்தவிங்கள மட்டும் இந்த திருமணத்துக்கு கூப்பிடுல இந்த ராமதாசு. ஆண்ட பரம்பரைன்னு சொல்றவனும், அடிமைப்பட்டு இருக்கறவனும் ஒன்னா இருக்க முடியாதுங்கற அரசியல் நாகரீகம் தெரியாதவரா இந்த மருத்துவர்..? இதப்போயி ஒரு குத்தம்னு சிலர் பேசறாங்க. கலைஞரும் ராமதாசும் இப்படி கொஞ்சிக்கறது அடுத்துவர்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கறதுக்கான அச்சாரம்தான்னு சொன்னதோட அரசியல் லாபத்திற்காக கலைஞர் இவ்ளோ கீழா போய்ட்டாரேன்னும் குதர்க்கவாதிங்க விமர்சனம் பண்றாங்க. அரசியல் நாகரீகத்துல இதெல்லாம் சாதாரணமப்பான்னு உட்டுட்டு போகாம, குத்தஞ்சொல்லி குசும்பு பண்ணாதீங்க.
          அப்பறம் அந்த திருமண ஜோடி அதாங்க ராமதாஸோட பேரன் - பேத்தி பேரென்னான்னு தெரியுங்களா...? ‘பரசுராமன் -’ஸ்ரீகாந்தி’ன்னு சுத்தமான தமிழ் பேரா வெச்சிருக்காரு. என்ன பேரக் கேட்டதும் மருத்துவர் ராமதாஸின் தமிழுணர்வு பொங்கிவருதா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக