வியாழன், 18 டிசம்பர், 2014

அன்புள்ள ரஜினிகாந்த்...!

   (ரஜினிக்கு ஒரு மனந்திறந்த மடல்)


     நீங்கள் நடித்த படத்தின் தலைப்பிலேயே இந்த மனம் திறந்த மடலை எழுதுகிறேன். இன்றைக்கு லிங்கா படம் வெளியான மகிழ்ச்சியிலும், அந்தப் படம் வெற்றியா…? தோல்வியா…? என்ற தவிப்பிலும் நீங்கள் இருப்பீர்கள். இந்த நேரத்தில் இந்த கடிதம் அவசியமானதா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தாலும், இனியும் காலங்கடத்தாமல் என் கருத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலே இதை எழுதுகிறேன். இது சற்று பெரிய கடிதமாக இருக்கலாம். என்றாலும் கொஞ்சமும் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்களேன். காரணம் இது உங்களைப்பற்றிய விமர்சனக் கடிதமல்ல. உங்கள் மேல் உள்ள அக்கறையின் காரணமாகவே இந்தக் கடிதம் எழுத நேரிட்டது. சரி விசயத்திற்கு வருவோம்....
     எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், கமலஹாசன் என்று சிவந்த நிறத்து நடிகர்கள் கோலோச்சி வந்த திரையுலகில் கருப்பு நிறத்துக்கு ஒரு மவுசை உருவாக்கிய ‘மெடிக்கல் மிராக்கல்நாயகன் என்கிற வகையில் உங்களை நான் ரசித்திருக்கிறேன். உங்களின் வருகைக்குப் பின்தான் விஜயகாந்த், விஜய், விஷால் போன்ற கருப்பு நாயகர்களுக்கு வாய்ப்பு கிடைத்து புகழ்பெற முடிகிறது...!
    மேடை நாடக பாணி மிகை நடிப்பே நடிக்கப்பட்ட  காலகட்டங்களில் பைரவி, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலேஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்ட குரல்  உள்ளிட்ட  படங்களில் எதர்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சக கலைஞனும் உங்களின் நண்பருமான கமலஹாசனுக்கு தான் சற்றும் சளைத்தவனில்லை என்பதை நிரூபித்தவர் நீங்கள்...!

    அதன் பின்னர் வணிக ரீதியான படங்களில் கால்பதிக்கத் தொடங்கி உங்களின் தனிமுத்திரையோடு ‘ஸ்டைல் மன்னன்என்ற பட்டத்தைத் தாங்கி பலரையும் வசீகரித்தீர்அந்த வகையில் நீங்கள் நடித்த  நெற்றிக்கண், பில்லா, மூன்று முகம், முரட்டுக் காளை, நான் சிகப்பு மனிதன், நல்லவனுக்கு நல்லவன் என்று  பல படங்களும் உங்களின் ஸ்டைலுக்காக இன்றைக்கும் பாராட்டப்படுகிறது. உங்களின் அந்த நடிப்பு மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது...
    பல படங்கள் மூலம் வசூல் சாதனையைச் செய்த வணிக நடிகன் என்பதை நீங்கள் பலமுறை நிலை நாட்டியிருக்கிறீர். எனக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படாத அந்த காலகட்டங்களில் உங்களின் படமும், கமலின் படமும் வெளியாகும் நாட்களில் இரண்டு ரசிகர்களிடையேயும் போட்டி வரும் போதெல்லாம் நானும் அந்தச் சண்டையில் கலந்துகொண்டு குதூகலித்ததுண்டு. அது ஒரு காலகட்டம்.

    தற்போது காலமும், ரசனையும் மாறிவருகிறது. உங்களை எத்தனை செலவு செய்து சீவி சிங்காரித்தாலும் உங்களின் வயதும் முதிர்ச்சியும் அப்பட்டமாக தெரிகிறது. நாள்தோறும் கண்ணாடியில் முகம் பார்க்கும் உங்களுக்கு நான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை நானறிவேன்.
  ஆக, அந்த கால மாற்றத்திற்கு ஏதுவாக உங்களையும் மாற்றிக்கொண்டால்தானே சரியானதாக இருக்கும். மாறாக, அறுபத்தியாறு வயதிலும் உங்களின் மகள் வயதிற்கும் இளைய நடிகைகளுடன் காதல் செய்துதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது கொஞ்சமும் நியாயமில்லை என்றே எனக்குத் தோன்றகிறது ரஜினி.

   உங்களின் காலகட்டத்து நடிகர்களும், உங்களுக்குப் பின்னால் தோன்றிய நடிகர்களும் தங்களின் வயதிற்கும் நடிப்பு முதிர்ச்சிக்கும் ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனைப் பற்றி சொல்லலாம். இன்றைக்கும் அவருக்கான வணிக சந்தை  பெரியதாக இருந்தாலும், வம்படியாக ஒப்பனை செய்து கொண்டு, இளைய நாயகிகளுடன் காதல் செய்யும் படங்களில் நடிப்பதில்லை. முதிர்ந்த தோற்றத்தில் நடித்தாலும் அவருக்கான ரசிக கூட்டம் ரசித்துப் பாராட்டுகிறது. ஆக, இந்தி திரையுலகில் அவருக்கான இருப்பு இன்னும் இருக்கிறது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
    ஆனால், பாருங்கள் ரஜினி, உங்கள் வயதில் மூன்றில் ஒரு பங்கே வயதைக் கொண்ட இளம் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி இருக்கிறதே சகிக்க முடியாததாக இருக்கிறது. உங்களை இளமையாகக் காட்ட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் செலவில் பல நல்ல படங்களை எடுத்திருக்கலாம். அத்தனை பொருட்செலவு செய்யப்பட்டாலும் உங்களின் முதுமை பல இடங்களில் பல்லிளித்து காட்டிக்கொடுத்து விடுகிறது.

    குறிப்பாக நீங்கள் நடித்த எந்திரன் படத்தில் ரோபோ வேடத்திற்கு நீங்கள் செய்துகொண்ட ஒப்பனையில் ரஜினி என்ற நடிகன் தெரியவே இல்லை. மறைந்த நடிகர் ‘தேங்காய்‘ சீனிவாசனைப் போலத்தான் பல காட்சிகளில் தெரிந்தீர்கள் என்ற விமர்சனம் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் ஐஸ்வர்யாவை லவ்வும் காட்சியிலும், முன்னதாக சிவாஜி படத்தில் நடிகை ஸ்ரேயாவையும், அதற்கும் முன்னதாக சந்திரமுகி படத்தில் நயன்தாரவையும் லவ்விய காட்சிகளும் ரசிகர்களை நெளிய வைத்தது. அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படி தெரிந்திருந்தால் இப்பொழுது வந்திருக்கும் லிங்கா படத்தில் இரண்டு இளம் நாயகிகளுடன் ஆட்டம் போட்டிருக்கமாட்டீர் தானே..?  
      ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இந்த இயக்குநர்கள் சூப்பர் ஸ்டாரை சூப்பராக காட்டுகிறோம் என்று கூறி, கணினியின் உதவியால் உங்களைப் போன்ற கிராபிக்ஸ் உருவத்தை வரைந்து காட்சிப் படுத்துகிறார்கள். இதை வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால், உங்களை வைத்து காமெடி... கீமெடி... செய்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. உங்களின் எதர்த்த நடிப்பு, வேகம், ஸ்டைல் ஆகியவை உங்களைவிட்டு என்றோ விலகி ஓடிவிட்டது என்பது உங்களுக்குப் புரிகிறதா இல்லையா…?

    உங்களின் தற்போதைய படங்கள் லாபகரமாக ஓடவேண்டுமென்றால் பல யுத்திகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கிறது. பிரமாண்டம் என்ற போர்வையில் அதிக பொருட்செலயில் படத்தை தயாரித்தாக வேண்டும். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஷங்கர் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, நயன்தாரா தொடங்கி சோனக்ஷி சின்ஹா வரையிலான இளம் நாயகிகள் நடிக்க வேண்டும். இப்படி பல பட்டியல்களைக் கொண்டே உங்களின் படங்கள் உருவாகிறது. 
   மேற்படியான கட்டமைப்பில் உங்கள் படம் உருவாக்கப்படுவதை எதைக் காட்டுகிறது என்றால், உங்களுக்கென்று இருப்பதாகச் சொல்லப்படட அந்த மவுசு தேய்ந்து விட்டதைத்தான். அதெல்லாம் பொய் ரஜினிக்கென்ற ‘மார்க்கெட் வேல்யூ இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்று உங்கள் பின்னால் உள்ள கூட்டம் ஜல்ரா தட்டும். அது உண்மையென்றால், ஒரே ஒரு படத்திலாவது உங்கள் வயதிற்கேற்ற பாத்திரத்தில் நடியுங்களேன் பார்ப்போம். அப்பா ரஜினி, தாத்த ரஜினி என்று பிளாஷ் பேக் சொல்லாத கதையாக தேர்ந்தெடுத்து நடித்து நிரூபியுங்கள்.
   உங்கள் இளவயது தோற்ற பாத்திரத்தைவிட முதிர்ச்சியான தோற்றத்தில் வரும் பாத்திரத்தின் ஸ்டைல் நடிப்பு ஓரளவு நன்றாகத்தான் உள்ளது என்பது உங்களுக்குப் புரியுமா...? எடுத்துக்காட்டு படையப்பா படத்தில் பிற்பகுதியில் வரும் முதிர்ந்த ரஜினியின் ஸ்டைல் நடிப்பே உங்கள் ரசிகரையும் ஈர்த்தது. அந்தப்படத்தின் வெற்றிக்கு அந்த நடிப்பே சன்று. வயதிற்கேற்ற பாத்திரத்தில் நடித்தால் அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள் என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
    ஒன்றை நினைத்துப் பாருங்களேன் ரஜினி, உங்களுடன் தொடக்க காலத்தில் இணையாக நடித்த பல நடிகைகள் அம்மா, அக்கா வேடங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பேச்சுக்காக நடிகை ராதிகாவை இன்றைய இளம் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கி லவ்வச் சொல்லுவோம். அதேபோல் நடிகை அம்பிகாவுடன் உங்கள் மருமகன் தனுசை ஜோடியாக்கி விரட்டி விரட்டி காதலிப்பதைப் போன்று படமெடுத்தால் எப்படியிருக்கும்….? உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா…?
    எங்களைப் போன்றவர்கள் அதனால் என்ன தவறு என்று கேட்பதோடு, அதை நியாயப்படுத்துவோம். ஆனால், பெண்களுக்கென்றே புதிய இலக்கணத்தை உங்களின் படங்களின் மூலம் கற்றுக்கொடுத்துவரும் நீங்களும், உங்கள் ரசிகர்களும் என்ன கண்ணோட்டத்தில் அதைப் பார்ப்பீர்கள்…?
   அப்படியொரு ஜோடி நடிப்பதை நினைத்துக்கூட பார்க்க கூச்சப்படுவீர்கள் தானே….? அப்படியானால், நீங்கள் மட்டும் கொஞ்சமும் வெட்கப்படாமல் இளம் நாயகிகளுடன் இணை சேர்ந்து நடிப்பது எப்படி சரியாக இருக்கும். முத்துப் படத்தில் நீங்கள் பார்த்து வளர்ந்த குழந்தை நட்சத்திரமான மீனாவுடன் ஜோடி சேர்ந்த பொழுதே கடும் விமர்சனம் உங்கள் மீது எழுந்தது. அப்பொழுதே நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும். அப்படியான சுதாரிப்போ, சிந்தனையோ உங்களிடம் எழவில்லை. சரி கலையின் மீது உங்களுக்கு தீராத காதல் இருப்பதால்(?) சின்ன வயது நடிகையுடன் நடிக்க ஒத்துக் கொள்கிறீர் என்று எங்களை நாங்கள் சமாதானம் செய்து கொள்கிறோம். வேறு என்ன செய்வது…?
      இங்கே நீங்களும், உங்கள் ரசிகர்களும் ஒரு கேள்வியை கேட்கலாம். அதாவது. அய்ம்பது ஆண்டுகளைக் கடந்தும் திரையுலகில் நாயகனாக நடித்துவரும் சக கலைஞன் கமலஹாசன் மீது, ஏன் இந்த விமர்சனம் எழவில்லை என்று. சரியான கேள்விதான் இதை நானும் ஒப்புக்கொள்ளவில்லை தான். ஆனால், உங்களுக்கும் அவருக்குமான வேறுபாடு என்னவெனில், நீங்கள் ரஜினியாக காட்டவேண்டும் என்பதற்காக ஒப்பனை செய்கிறீர். அவரோ கமலாக தெரியக்கூடாது என்று தனக்கு ஒப்பனை செய்துகொள்கிறார். இது உண்மைதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்.
    ஆனால், உங்களின் படத்தில் கதையைப் பற்றியோ பாத்திரங்களைப் பற்றியோ நான் குறிப்பிட முடியாது. முத்து, அருணாசலம், படையப்பா போன்ற படத்தில் என்ன கதையோ, என்ன பாத்திரமோ அதுவே தான் சில டிங்கரிங் மற்றும் பட்டி வேலை பார்க்கப்பட்டு. ‘லிங்காவாக வெளியே வந்திருக்கிறது. ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கிறேன் பேர்வழி என்று கே.எஸ்.ரவிக்குமார் என்னும் சமூக அக்கறை என்பதே சிறிதுமற்ற மசாலா இயக்குநர் செய்யும் வேலைதான் இது என்று எனக்குப் புரிகிறது. இப்படிப்படட படங்களில் நடிப்பதால் உங்களின் மார்க்கெட் வேல்யூ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
     மாபெரும் வெற்றி பெற்றதாக சொல்லப்பட்ட சிவாஜி மற்றும் எந்திரன் படங்கள் நட்டத்தையே தந்தது என்று விவரம் தெரிந்தவர்கள் இப்பொழுது சொல்கிறார்கள். நாளைக்கு அந்தப்பட்டியலில் இன்றைய லிங்காவும் இணையலாம்.

     ‘சொத்தையெல்லாம் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நடித்தே, பல கோடிகளை சம்பாதித்தவர் என்று உங்களைப்பற்றிய ஒரு நக்கலான கருத்து சமூக வலைத்தளமான முகநூலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஏகப்பட்ட லைக்குகள் வேறு விழுந்த வண்ணம் இருக்கிறது. அதேபோல், ‘2050ஆம் ஆண்டில் ரஜினியின் அம்மாவாக நடிப்பதற்கு தெய்வத் திருமகள் படத்தில் நடித்த சாராஒப்புக்கொண்டார்என்ற ஏச்சுகளும் பேச்சுகளும் முகநூலில் வரத்தொடங்கிவிட்டது. அந்த கருத்துகள் வருவதற்கு முட்டுக்கட்டைப் போட முயற்சிக்காதீர். மாறாக உங்களை மாற்றிக் கொள்ள கொஞ்சமாவது முயற்சி செய்யுங்களேன் ரஜினி.  
    மற்ற இளைஞர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுங்கள் என்பதல்ல என் கருத்து (அப்படியொரு முடிவை எடுத்தால் அதுவே இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்யும் பெரும் நன்மையாக அமையும்). உங்களின் வயதிற்கும் கண்ணியத்திற்கும் ஏற்றார் போன்ற பாத்திரங்களை வடிவமைக்கச் சொல்லி அதில் நடியுங்கள். அதில் உங்களின் தனித்துவத்தை, ஸ்டைலை வெளிப்படுத்துங்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்களை அதிகம் வசீகரித்திருக்கும் நடிகர் அஜித் தன்னை இளைஞனாக காட்டிக் கொள்ள முயற்சிக்காமல் முதிர் கன்னனாகவே (முதிர் கன்னிக்கு ஆண்பால் பெயர்) நடிக்கிறார். அவரின் படங்கள் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தருகிறதே. அதுபோல் நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது என்பதே என் கேள்வி. 
    இங்கே உங்களின் ரசிகக் கூட்டத்தைப் பற்றி சொல்லியாக  வேண்டும். உங்களின் புகழ் உச்சாணியில் இருந்த காலகட்டத்தில் உங்களின் தலையில் விழுந்த முன்வழுக்கையை மறைக்க நீங்கள் செய்து கொண்ட ஹேர் ஸ்டைல் உங்களின் அக்மார்க்கில் ஒன்றாகிவிட்டது. இதைப் பார்த்து பல இளைஞர்கள் தாங்களும் தங்கள் முன்மண்டையை சிரைத்துக் கொண்டு உங்கள் ஹேர் ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார்கள். அதுமட்டுமா, நீங்கள் திரைப்படங்களில் போட்டு நடிக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்து போட்டு உலா வந்தனர். எனக்கெல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது. உங்களின் பல ரசிகர்கள் சாலைகளில் நடக்கும் போதுகூட இயல்பாக நடக்காமல் உங்களைப் போன்று நடந்து வருவார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சர்க்கஸ் பபூன்கள் செய்யும் கோமாளித்தனமாகவே தோன்றும்.

    அந்தளவுக்கு கண் மூடித்தனமாக (அறிவுகெட்டு என்றுகூட அதற்கு பெயரிடலாம். ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்.) அடியொற்றி வரும்  உங்கள் ரசிகர்கள்தான் லிங்கா போன்ற படங்கள் வெளிவருவதற்குக் காரணமாக அமைகிறார்கள் என்றால், அப்படி அவர்களை மூளைச் சலவை செய்திருப்பது உங்களின் வணிக குரூர புத்தியே என்று நான் குற்றம் சாட்டுவேன். ‘என்னை வாழவைத்த தமிழ்மக்களே…என்று விழிக்கும் நீங்கள், அவர்களுக்கு விட்டுச் செல்வதெல்லாம், பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், மூடத்தனமான பழக்க வழக்கங்களையுமே. ஆனால், உங்களுக்கு மட்டும் எதுவுமே வணிகம் சார்ந்த லாப நோக்குச் சிந்தனைதான்.

      இந்த லிங்கா படமும் ஒருவேளை வசூலில் சாதனை படைக்கலாம். அதுகூட, ரசிகர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக அமையலாமே தவிர, சிறப்பான படம் என்ற காரணத்திற்காக இருக்காது என்பதே என் மேலான கருத்து. இது போன்ற படங்களின் பட்டியல் தொடரும் பட்சத்தில் திரையுலக வாழ்வில் இருந்து உங்கள் ரசிகர்களாலேயே நீங்கள் ஒதுக்கப்படும் அவலச்சூழல் ஏற்படும் என்பது நிதர்சனம்.
     அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே இந்த கடிதம். ஆகவே, தயவு செய்து உங்களின் அலிச்சாட்டியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் ரஜினி. இறுதியாக கொஞ்சம் மன வருத்தத்துடன்தான் இதைச் சொல்கிறேன்,

ரொம்பவுமே கடுப்பேத்துறீங்க மை லார்ட்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக