புதன், 19 செப்டம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணெய்


ஒரு கண்ணில் சுண்ணாம்பு...?

சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது தமிழக மக்களை பதறடித்து வருகிறது. 
அண்மையில் சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்து நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தமிழக மக்களை துடிதுடிக்க வைத்தது.
இந்த கொடூர சம்பவத்திற்கு அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி தனது பள்ளி வேனின் சக்கரத்திலேயே சிக்கி உயிரிழந்தாள். இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அடுத்து சில நாளிலேயே சென்னையில் பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு 4ம் வகுப்பு மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். 
இந்தப் பள்ளியில் திரைப்பட இயக்குநர் மனோகர் என்பவரின் மகன் ரஞ்சன் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவம் நடந்த காலையில் பள்ளிக்குள்ளேயே உள்ள நீச்சல் குளத்தில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இச்சம்பவமும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மற்ற இரண்டு பள்ளிகளில் நடந்த சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பெரு வித்தியாசத்தை சமூக அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் விமர்சித்திருப்பார்கள். 
பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி இறந்ததும் செய்தி அறிந்து பொது மக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுக்கை இட்டபோது அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பள்ளி நிருவாகம் தடுத்துள்ளது.
காவல்துறையினர் வந்தபின் இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர். உதவியாளர், விளையாட்டு ஆசிரியர், துப்புரவு பணியாளர் என 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால், பள்ளி நிருவாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
நீச்சல குளத்தில் இறந்த மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை, வலிப்பு வந்துவிட்டது, இதனால்தான் இறந்து விட்டான் என்று பொறுப் பற்ற தன்மையில் பேசிய பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஜியோன் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில், தானாக முன்வந்து வழக்குப்போட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன் பின்னரே அரசு சுதாரிப்படைந்து கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ஏன் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் போடப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் ஜியோன் பள்ளி நிருவாகியான தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் முழுக்க முழுக்க அஜாக்கிரதையே காரணம் என்று காவல்துறையே கூறியுள்ளது. அப்படி உள்ள நிலையில் படு சாதாரணமான கவனக்குறைவு காரணமாக என்ற பிரிவில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கொலை வழக்குப் போடக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். 
இச்சம்பவங்களுக்கிடையே மற்றொரு செய்தி யையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளையாட்டரங்கம் இடிந்து விழுந்து 10தொழிலாளிகள் பாலியாகினர். அந்த சம்பவத்திற்கு காரணம் அக்கல்லூரியின் நிருவாகியான ஜேப்பியார்தான் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத் தில் அப்பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபியோ மற்ற நிருவாகிகளோ யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்கள் மீது வழக்கும் போடப்படவில்லை. இது என்ன வகை நீதி என்று புரியவில்லை. திருமதி ஒய்ஜிபியின் நேரடி கண்காணிப்பில்தான் இப்பள்ளி நிர்வாகம் நடக்கிறது. மற்ற தனியார் பள்ளிகளில் எல்லா மக்களும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதுபோல் இப்பள்ளியில் சேர்த்துவிட முடியாது. இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்கும் ‘உயர்’ குடிமக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டு மறைமுகமாக உயர்குடிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு பின்பற்றி வந்ததுதான் இந்த பள்ளியின் நிருவாகம். இப்பொழுது யாரால் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த முடியுமோ அவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என்ற நடைமுறை. 
அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட சற்று தாமதமானாலும் கூட டிசி கொடுத்து விடுவோம் என்று மிரட்டலும், கடுமையான கட்டுப்பாடும், எதற் கெடுத்தாலும் பணம் என்கிற பிடுங்கல் இதுதான் அப்பள்ளியின் நிருவாகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அப்பாவி மாணவனை அநியாயமாக சாக விட்டுள்ளனர் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
இந்நிலையில் திருமதி ஒய்ஜிபி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசும் காவல்
துறையும் தயங்குவதன் காரணத்தை மிக எளிதாக அறிந்து விடலாம். சமச்சீர் கல்வியை கைவிடுவதற்கு இன்றைய தமிழக அரசு முயன்ற போது அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினராக முதல்வரால்  பரிந்துரைக்கப் பட்டவர்தான் இந்த திருமதி ஒய்ஜிபி. என்றழைக்கப்படும் ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. பணக்காரர்களுக்காக பள்ளியை நடத்தும், அதுவும் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டத்தைப் பின்பற்றாத ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியை எப்படி இந்தக் குழுவில் சேர்க்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின என்பது நினைவிருக்கலாம். 
ஆக, முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுதான் நடவடிக்கை எடுக்காமல் விட்டதற்கான காரணமாக இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. 
பெருவாரியான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் சிறப்பாக பணியாற்றிவரும் தமிழக முதல்வர் மீது இம்மாதிரியான குற்றச் சாட்டு எழுவதற்கு காரணமாக அமைந்துவிட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி நிருவாகத்தின் மீது மற்ற கல்வி நிருவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் கடுமையான நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும் மறு கண்ணிற்கு சுண்ணாம்பு தடவியது போலாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக