புதன், 19 செப்டம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணெய்


ஒரு கண்ணில் சுண்ணாம்பு...?

சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது தமிழக மக்களை பதறடித்து வருகிறது. 
அண்மையில் சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்து நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தமிழக மக்களை துடிதுடிக்க வைத்தது.
இந்த கொடூர சம்பவத்திற்கு அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி தனது பள்ளி வேனின் சக்கரத்திலேயே சிக்கி உயிரிழந்தாள். இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அடுத்து சில நாளிலேயே சென்னையில் பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு 4ம் வகுப்பு மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். 
இந்தப் பள்ளியில் திரைப்பட இயக்குநர் மனோகர் என்பவரின் மகன் ரஞ்சன் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவம் நடந்த காலையில் பள்ளிக்குள்ளேயே உள்ள நீச்சல் குளத்தில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இச்சம்பவமும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மற்ற இரண்டு பள்ளிகளில் நடந்த சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பெரு வித்தியாசத்தை சமூக அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் விமர்சித்திருப்பார்கள். 
பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி இறந்ததும் செய்தி அறிந்து பொது மக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுக்கை இட்டபோது அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பள்ளி நிருவாகம் தடுத்துள்ளது.
காவல்துறையினர் வந்தபின் இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர். உதவியாளர், விளையாட்டு ஆசிரியர், துப்புரவு பணியாளர் என 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால், பள்ளி நிருவாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
நீச்சல குளத்தில் இறந்த மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை, வலிப்பு வந்துவிட்டது, இதனால்தான் இறந்து விட்டான் என்று பொறுப் பற்ற தன்மையில் பேசிய பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஜியோன் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில், தானாக முன்வந்து வழக்குப்போட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன் பின்னரே அரசு சுதாரிப்படைந்து கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ஏன் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் போடப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் ஜியோன் பள்ளி நிருவாகியான தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் முழுக்க முழுக்க அஜாக்கிரதையே காரணம் என்று காவல்துறையே கூறியுள்ளது. அப்படி உள்ள நிலையில் படு சாதாரணமான கவனக்குறைவு காரணமாக என்ற பிரிவில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கொலை வழக்குப் போடக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். 
இச்சம்பவங்களுக்கிடையே மற்றொரு செய்தி யையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளையாட்டரங்கம் இடிந்து விழுந்து 10தொழிலாளிகள் பாலியாகினர். அந்த சம்பவத்திற்கு காரணம் அக்கல்லூரியின் நிருவாகியான ஜேப்பியார்தான் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத் தில் அப்பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபியோ மற்ற நிருவாகிகளோ யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்கள் மீது வழக்கும் போடப்படவில்லை. இது என்ன வகை நீதி என்று புரியவில்லை. திருமதி ஒய்ஜிபியின் நேரடி கண்காணிப்பில்தான் இப்பள்ளி நிர்வாகம் நடக்கிறது. மற்ற தனியார் பள்ளிகளில் எல்லா மக்களும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதுபோல் இப்பள்ளியில் சேர்த்துவிட முடியாது. இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்கும் ‘உயர்’ குடிமக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டு மறைமுகமாக உயர்குடிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு பின்பற்றி வந்ததுதான் இந்த பள்ளியின் நிருவாகம். இப்பொழுது யாரால் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த முடியுமோ அவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என்ற நடைமுறை. 
அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட சற்று தாமதமானாலும் கூட டிசி கொடுத்து விடுவோம் என்று மிரட்டலும், கடுமையான கட்டுப்பாடும், எதற் கெடுத்தாலும் பணம் என்கிற பிடுங்கல் இதுதான் அப்பள்ளியின் நிருவாகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அப்பாவி மாணவனை அநியாயமாக சாக விட்டுள்ளனர் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
இந்நிலையில் திருமதி ஒய்ஜிபி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசும் காவல்
துறையும் தயங்குவதன் காரணத்தை மிக எளிதாக அறிந்து விடலாம். சமச்சீர் கல்வியை கைவிடுவதற்கு இன்றைய தமிழக அரசு முயன்ற போது அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினராக முதல்வரால்  பரிந்துரைக்கப் பட்டவர்தான் இந்த திருமதி ஒய்ஜிபி. என்றழைக்கப்படும் ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. பணக்காரர்களுக்காக பள்ளியை நடத்தும், அதுவும் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டத்தைப் பின்பற்றாத ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியை எப்படி இந்தக் குழுவில் சேர்க்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின என்பது நினைவிருக்கலாம். 
ஆக, முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுதான் நடவடிக்கை எடுக்காமல் விட்டதற்கான காரணமாக இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. 
பெருவாரியான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் சிறப்பாக பணியாற்றிவரும் தமிழக முதல்வர் மீது இம்மாதிரியான குற்றச் சாட்டு எழுவதற்கு காரணமாக அமைந்துவிட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி நிருவாகத்தின் மீது மற்ற கல்வி நிருவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் கடுமையான நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும் மறு கண்ணிற்கு சுண்ணாம்பு தடவியது போலாகிவிடும்.

நிதி முதல் ஈமு வரை


பேராசை  பெருநட்டம்
கவர்ச்சிகரமான திட்டங்கள் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் காலத்திற்கு தகுந்தாற் போல் மக்களை தொடர்ந்து ஏமாற்றி கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் மோசடி கும்பல் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாள், வார, மாதச்சீட்டுகள், ஏலச் சீட்டுகள், வைப்பு தொகைக்கு அதிக வட்டி, தேக்கு வளர்த்தல், டேட்டா என்ட்ரி மூலம் அதிக பணம், தங்க நாணயம், தவணை முறையில் நிலம், கோடீஸ்வரராக்கும் இரிடியம், “ஆன்-லைன்’ லாட்டரி என பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றன.
திடீரென ஒருநாள் அந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருவதும் அதைப்பற்றி மக்கள் பரபரப்பாக சிறிதுகாலம் பேசுவதும் பின்னர் மறந்து போவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. என்றாலும் இந்த ஏமாற்றங்களின் மூலம் பாதிக்கப் படும் மக்களோ அல்லது அதைப்பற்றி தெரிந்து கொண்ட மக்களோ விழிப்புணர்வு பெற்றிருக் கிறார்களா என்றால், அதுதான் இல்லை. தங்களை அடுத்த ஏமாற்றத் திற்கு தயார் படுத்திக் கொள் கிறார்கள் என்பதுதான் கவனிக் கத்தக்க ஒன்று.
கடந்த சில ஆண்டு களில் இது மாதிரி யான மோசடிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டப் பட்டிருக்கும் என்பது தான் கவனிக்கத்தக்க ஒன்று. மிகப்பெரிய மோசடிகள் எல்லாம் கடந்த 15ஆண்டுகளுக்குள்ளாகத்தான் இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளில் வெளிவந்த முதலீட்டுக்கு 20விழுக்காடு 30விழுக்காடு வட்டி என்கிற பேராசை கொள்ளத் தக்க கவர்ச்சித் திட்டத்தினை முன்வைத்து தமிழ்நாடு முழுக்க பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தனது மோசடியை அரங்கேற்றின. அதன்மூலம் சுருட்டப்பட்ட தொகை பல்லாயிரம் கோடி ரூபாய். இந்நிறுவனங்களில் பணம் போட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் பல்லாயிரம் பேர்.
அடுத்ததாக டேட்டா என்ட்ரி மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கிளம்பிய கணினி நிறுவன மோசடி. இந்த மோசடிக்கு ஏமாந்து முன்னைவிட அதிகமானோர் தங்களது பணத்தை இழந்தனர். அடுத்ததாக ஆங்காங்கே நடைபெற்றுவரும் ஏலச்சீட்டு மோசடி, தவணைமுறை நிலமோசடி என்று நீண்ட பட்டியலே இருக்கிறது. 
இதில் அண்மையில் பலரையும் மிரட்டி யது தங்க நாணயம் தருவதாக 1800 கோடிக்கும் மேல் சுருட்டிய கோல்ட் கோஸ்ட் மற்றும் கோல்ட் நெட் நிறுவனங்களின் மோசடி. இவற்றையெல்லாம் கண்ணுற்ற மக்கள் கொஞ்சமேனும் விழிப்படைந்திருந்தால் அடுத்த மோசடி நடைபெறாமல் இருக்கும். ஆனால் அப்படி எந்த அதிசயமும் நடந்து விடவில்லை.
இப்போதைய மோசடி கோல்டில் இருந்து கோழிக்கு மாறியிருக்கிறது. அது இன்றைக்கு மிகப்பரவலாக பேசப்படும் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பானது. மற்ற கோழிகளை விட இந்தக் கோழி சற்றே பெரிது என்பதால் அதன் மோசடி தொகையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்க புற்றீசல்போல் பரவி வந்த இந்த ஈமு கோழி வளர்ப்புத் திட்ட மோசடி மூலம் கிட்டத்தட்ட 500கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.

ஈமுவை அடுத்து நாட்டுக் கோழி மோசடியும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதில் ஏமாற்றப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஏனென்றால், ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்திற்கு என்னவிதமான கவர்ச்சித் திட்டங்கள் சொல்லப் பட்டதோ அதில் அணுவளவும் மாறாமல் இதற்கும் சொல்லப்பட்டிருப்பதுதான். சிலந்தி வலையில் மாட்டும் விட்டில் பூச்சிகள் போல் இந்த கவர்ச்சிகரமான மோசடிகளில் தொடர்ந்து மக்கள் சிக்கிக் கொள்வதன் காரணம் வேறொன்றுமில்லை பேராசைதான். எதைச் செய்தாவது வாழ்வில் விரைவாக அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் எனப் பேராசை கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மோசடி நிறுவனப் பேர்வழிகளின் வலைகளில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர். இதில் பாமரர்&-படித்தவர், பெண்கள்&-ஆண்கள், கீழ்&மேல் அரசு ஊழியர்கள் என்ற பேதமெல்லாம் இருப்பதில்லை. ஏமாறுவது என முடிவெடுத்த பிறகு சமத்துவ மாய் ஏமாற வேண்டியதுதானே!
சிறிய முதலீடு, அதிக வட்டி, ஒருமுறை நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் “ஆயுள்வரை’ (பெரும்பாலும் அது அந்த நிறுவனத்தின் ஆயுளாகத்தான் இருக்கும்!) பெருகிக்கொண்டே இருக்கும் லாபம், ஆச்சர்யமூட்டும் பரிசுகள், சில வேளைகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் என பட்டியலில் அடங்காத வசீகர வாக்கியங்கள் மக்களை வளைத்துப் போட்டுவிடுகின்றன. மோசடி செய்ய வேண்டும் என்ற குறிக் கோளுடன் தொடங்கப்படும் இதுபோன்ற நிறுவனங்கள், முதலில் சேருவோருக்கு அதிக லாபத்தைத் தந்து அவர்களின் மூலம் செலவில்லா விளம்பரத்தையும் தேடிக்கொள்கின்றன. பல ஆயிரங்கள் கிடைத்து தாங்கள் பலனடைந்ததாக பிறர் கூறக் கேட்ட பிறகும், சராசரி மனிதரின் உள்ளம் சும்மாயிருக்குமா?
கூடுதலாக ஆட்களை சேர்த்துவிடுபவர் களுக்கு ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா...!’ என்கிற பாணியில் சிறப்பு பரிசுகள்  என்கிற அறிவிப்புகளும் பலரையும் இதுபோன்ற மோசடிகளில் விழ வைத்துவிடுகிறது. ‘குரங்கு தான் கெட்டதும் அல்லாமல் மொத்த வனத்தையும் கெடுத்த தாம்’ என்கிற பழமொழி நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். ஆனால் வாலில்லா இந்த மனிதக் குரங்குகள் செயல் பாட்டில் உண்மை இருக்க த்தான் செய்கிறது. தான் மட்டும் ஒரு மோசடி நிறுவனத்தில் இணைந்துவிட்டு சும்மா இருந்து விடுவதில்லை. மாறாக, தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்தே அந்த குழிக்குள் தள்ளுகிறது. அப்புறம் என்ன ‘உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்’ கதைதான். மக்களின் இந்த மனநிலை ஒருபுறம் இருக்க மோசடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 
மக்களின் பலவீனங்களை நன்றாகவே அறிந்துவைத்துள்ள மோசடி நிறுவனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் வழியே தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை அடிக்கடி ஒளிபரப்பி, மக்களை வசப்படுத்தி, தங்கள் நிறுவனத்தின் திறப்பு விழாக்களை மிகவும் பிரம்மாண்டமாக நடத்திவிடுகின்றன.

விழாவுக்கு பிரபலமான சிறப்பு விருந்தினர் களாகத் திரைப்பட நட்சத்திரங்களோ, அரசியல் வாதிகளோ, மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோதான் அழைக்கப்படுகின்றனர். அந்தப் பிரமுகர்களுடன் நிறுவனத்தின் பிரமுகரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதைப் பெரிய அளவிலான புகைப்படமாக்கி நிறுவனத்தின் அலுவலகத்தில் காட்சிக்கு வைத்து விடுகிறார்கள். இவற்றை கண்டுதான் நம்மில் பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பெருநட்டம் அடைந்து வாழ்க்கையை தொலைப்பதை விடுத்து ஒரு ரூபாய் என்றாலும் நியாயமான வழியில், உண்மையுடனும், நேர்மையாக உழைத்துக் கிடைக்கும் செல்வமே நிலைக்கும். அப்படிப்பட்ட பொருளே தேவை என்ற எண்ணம் ஆழப் பதிந்து, மக்கள் நெஞ்சில் மாற்றம் வந்துவிட்டால் அதன் பின்னர் ஏமாற்று வோருக்கு வேலையிருக்காது. மாறாக, அவர்கள்தான் ஏமாந்துபோவார்கள்.