திங்கள், 1 ஏப்ரல், 2013

வேண்டுதல் வேண்டாமை



-கோவன் மகன்

முன்னமாதிரி இப்பெல்லாம் என்னால முழுசா ஒரு செய்தி சொல்லவே முடியறதில்லீங். அடிக்கடி என்ர நாக்கு கொளறி மாத்தி மாத்தி சொல்லீப் புடுறேன். அது ஏதோ டங்க் பிறழ்ன்யாங்கற நோயா இருக்கலாம்ணு நெனெக்கிறேன். எது எப்படியிருந்தாலும் நம்ம கடமைய செஞ்சாக வேண்டியிருக்குங்கறதால, சில விசயங்கள உங்கள்ட்ட சொல்றேனுங்.
அண்மைல அந்த அதிர்ச்சியான செய்திய கேள்விப்பட்டதும் என்ர நெஞ்சே வெடிச்ச மாதிரியிருந்துச்சுங்க. பின்னென்னுங்க உலகத்தின் ஒப்பற்ற ஒரே சமாதானப் பொறா, சமாதானத் தூத்.. தூத்.. தூத்… தூதுவன் (கொஞ்சம் திக்குது அவ்ளோதாங்), மனிதநேய மாண்பாளர்னு அத்தனைக்கும் எடுத்துக்காட்ட இருந்த பால் தாக்ரே செத்துப் போயிட்டாருன்னு தெரிஞ்சதும் தூக்கம் தாளல்லீங்க (இல்லயில்ல..) துக்கம் தாளலங்க.

இத கேள்விப்பட்ட அமெரிக்க பிரதமர் மன்மோகன் சிங்கு (அய்ய்ய்யோ… இந்திய பிரதமர்னு மாத்திப் படிங்க) சோனியா காந்தினு எல்ல தலவலிங்களும் (அடச்சே) தலைவருங்களும் நேர்லயே போயி அந்த மகானுக்கு மரியாத செலுத்துனது மட்டுமில்லீங்க, அரசு மரியாதையோடு அடக்கம் பண்ணிட்டு வாந்தாங்க.
இந்த தேசத்தோட தந்தை காந்தினு நெரயப் பேரு சொல்றாங்க, ஆனா, என்னியப் பொருத்தவரைக்கும் தேசப்பிதாவோ கேசப்பிதாவோ அது தாக்ரேவாத்தான் இருக்கோணும். ஏன்னா, காந்தியாரு எப்பையுமே வன்முறைய தூண்டர மாதிரிதான் நடந்துக்குவாரு. அதுக்கு அடையாலமா கையில சிலம்பம் வெச்சுகிட்டு ரொம்பவும் மக்கள (அ)இம்சை செஞ்சவரு. ஆனா, இந்த பால் தாக்ரேவ பாத்தீங்கனா அப்படியே நேரெதிரா இருந்தவரு. எப்டின்னா பச்சரத்தம் குடிக்க வந்த ஓநாய் மாதிரி முகத்துல அப்டியொரு கொலவெறி (என்ன எளவுடாயிது? வரமுறயில்லாம ஸ்லிப்பாகுது.) பால்குடிக்கற பச்சப்புள்ள மாதிரி முகத்துல அப்படியொரு சாந்தமும், சமாதானமும், அமைதியும் குடிகெடுக்கற மாதிரியான (அடச்சே..) குடிகொண்டிருக்கற கருணைக்கடல்.
அடிப்பட்ட மனுசன் எறந்ததுக்கு நேர்ல போகாட்டியும் பரவால ஒரு எரங்கலத் தெரிவிக்கக்கூடா போகலியே இந்த மார்கண்டேயகட்ஜூ. இவுரு வேணா நீதியரசரா இருந்திருக்கலாம், இப்ப பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவோட தலைவரா இருக்கலாம். அதுக்காக ஒரு கேசப்பிதாவுக்கு இப்படியா அவமானத்த ஏற்படுத்தறது. இவுருகூட சேந்துகிட்டு முற்போக்குவாதிங்கன்னு சொல்ற பலரும் சேத்தவாரி எறக்கைற மாதிரி விமர்சிக்கறாங்க.
அப்படி என்ன அந்த மனுசன் (அதாங்க நம்ம தாக்ரே) என்ன தப்ப செஞ்சாரு? மக்கள்ட்ட இருக்கற ஒற்றுமையை வெட்டி சாய்க்கணும்னு (ச்சே..ச்சே..) வேற்றுமைய களையணும்னு அல்லும் பகலும் அயராம படுகொல செஞ்சாரு (ஏந்தான் இந்த நாக்கு இப்டி சதி பண்ணுதுனு தெரியலீயே.) அயராம பாடுபட்டவரு. இன்னுஞ் சொல்லப் போனா, இசுலாமியருங்கமேலதான் அவருக்கு ரொம்பபாசம். அவிஙகெல்லாம் ஆரோக்யமாவும், வீரமாவும் இருக்கோணுங்கறதுக்காக, திடுத்திப்புன்னு தன்னோட ஆட்களவெச்சு அடிக்கற மாதிரியும், வெட்றமாதிரியும் நாடுரோட்ல நாடகம் நடத்துவாரு. அந்த மாதிரி நேரத்துல தெரியாத்தானமா ஒருசிலர்மேல கத்திபட்டு கழுத்தறுந்து போயிருப்பாங்க. இது ஒரு குத்தமாங்?
அதே மாதிரி உலகமெலாம் இருக்கற தமிழர்கள மற்ற நாட்டுக்காரன் தாக்க வந்த எப்படி தப்பிக்கறதுன்னு தற்காப்புக் கலையெல்லாம் கத்துக் கொடுக்க நெனச்சாரு. வௌயாட்டுன்னா ஆங்காங்கே அடிபடறதுதான். ஆனாலும், தாக்ரேவோட நல்லெண்ணத்த புரிஞ்சுக்காத நம்மாளுங்க, தாக்றாங்க, தாக்றாங்கன்னு மும்மைலயிருந்து ஓடியாந்துட்டாங்க. இது யாரோட குத்தம் நீங்களே சொல்லுங்.
இதக்கூட விடுங்க மும்பைல இருக்கற தொழிற் சங்கவாதிங்க அங்க தொழில் செய்யவந்த அப்பாவி அம்பானி போன்ற ஆள்களுக்கு தொந்தரவு கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு கொதிச்சுப் போன நம்ம தாக்ரே மும்பைல இருக்கற ஏழ, பாழைங்க வேலவாய்ப்புக்கு என்ன பண்ணுவாங்கன்னு தொலைநோக்குப் பார்வையோடப் போயி தொழிற்சங்க ஆட்கள தட்டிக் கேட்டாரு.
என்ன ஒன்னு தட்டும் போது கொஞ்சம் பலமா தட்டிட்டாரு. அதனால கொஞ்சப்பேரு போய் சேந்தட்டாங்க. ஆனா இன்னைக்கு நெலம என்னன்னா எத்தன மொதலாளிங்க அவுரு கட்சிக்கு கப்பம் கட்டிட்டு இருக்கறாங்க தெரியுங்களா? அப்படியெல்லாம் இருக்கறதனாலதான் கட்சி நடத்த முடியுது. அவுரு பெத்தடுத்த மக்களுக்காக உழைக்க முடியுது. இப்பச் சொல்லுங்க தாக்ரேவுக்கு இரங்கல் தெரிவிக்காறது சரியா? தவறா?
என்னயிருந்தாலும் இந்த மனுசனுக்கு இத்தன தைரியம் கூடதுங்க சென்டரலு, ஸ்டேட்டுன்னு வித்தியாசமில்லாம பயந்து நடுங்கற ஒரு பெரிய்ய்ய்ய ஆள நேர்மையா விமர்சனம் செஞ்சதிருக்கே உள்ளபடியே கொஞ்சம் பலமாவே பாராட்டலாம். இப்ப நாஞ்சொல்லிட்டிருக்கற பாராட்ட வேண்டிய மனுசன் நீதியரசர் மார்கண்டேய கட்ஜூதான்.
------------------------
     உண்மையிலேயே காங்கிரஸ்காரங்க எம்புட்டு நல்லவிங்க தெரியுங்களா? அவிங்க மாதிரி மக்கள கழுத்த நெறுச்சு கொல்றவிங்க (போச்சு போச்சு மறுபடி டங்க் பிறழ்ன்யா ஆரம்பிச்சுரு) மக்கள காலத்துக்கும் நேசிக்கறவிங்க யாருங்கிடையதுன்னு நான் அடிச்சு சொல்றேனுங்க. எப்படின்னு கேக்கறீங்களா?
அம்மா-அப்பா, ரெண்டோ மூனோ கொழந்தீங்க இருக்கற ஒரு குடும்பத்துக்கு மாசத்துக்கு எம்புட்டு செலவாகும்னு நெனைக்கிறீங்க? ஒரு அஞ்சாயிரம் இல்லைனா பத்தாயிரம் அதுவுமில்லீனா இருவதாயிரம்னு நீங்க எப்படிவேணா நீங்க உங்க தகுதிக்கு ஏத்தமாதிரி கணக்குப் போடுங்க. ஆனா, பாருங்க நீங்க நம்பவே முடியாது அஞ்சுபேரு கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆகுற செலவுன்னு பாத்திங்கனா அதிகபட்சம் 600 ரூபாதாங்க செலவாகும்.

என்ன நம்ப முடியலீங்களா? பொன்னி, சம்பா, அய்யாரு எட்டு, அய்யாரு இருவதுன்னு நாம சாப்படற அரிசியோட வெல கிலோ ஒத்த ரூபா. இங்க வௌயற அத்தன காய்கறிகளும் அதே ஒத்த ரூபா. இதுதவிர மளிக சாமனுங்க ரெண்டு ரூபா, மூனு ரூபா. அதவிட முக்கியமா ஒரு கேஸூ  50 ரூபாய்க்கு கெடைக்கறப்போ 600 ரூபாயே அதிகம்னு தோணுமா? தோணாதுங்களா?
என்னடா இவன் தண்ணிய கிண்ணியப் போட்டுகிட்டு ஔறானோன்னு நீங்க நெனைக்க வேணாங்க. ஒரு குடும்பத்த நடத்தறதுக்கு மாசம் 600 ரூபாயே போதும்னு சொன்னது டில்லியோட முதலமைச்சரா இருக்கற ஷீலா தீட்ஷித் அம்மையாருதான்.  சும்மா போறபோக்குல இந்த கருத்த அவிங்க சொல்லல்ல. "அன்னசிறீ யோஜனா'ங்கற, உணவு பாதுகாப்பு திட்டம் தொடக்கவிழாவுலதான். அந்த அம்மையார் பேசியிருக்காரு.
அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானதுன்னு சொன்னதிருக்கே அத்தனையும் தஞ்சாவூரு கோயில் கல்வெட்டுல பொறிக்க வேண்டிய பொன் மொழிகள். இப்ப சொல்லுங்க, தண்ணிப் போட்டுட்டு ஔருன்னது யாருன்னு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக