வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தனியார் துறைகளில் வஞ்சிக்கப்படும் தாழ்த்தப்பட்டோர்...!



ஜாதிய ஒடுக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் பெயர் ‘போன’ இந்தியாவில், இன்னும் அந்தக் கொடுமை இம்மியளவும் குறையாத நிலை நீடிக்கிறது. 
நாட்டின் வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும் 
நிலைதான் இப்போதும் உள்ளது.தனியார் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும் 
பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாக பல புள்ளிவிவரங்கள் 
கூறுகிறது.
மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பெரும்பான்மையாக இம்மக்களுக்கு தனியார் துறையில் மிகக் குறைந்த அளவே, அதுவும் சாதாரண கூலி வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.
மஹாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் அதற்கேற்ப மக்கள் தொகையில் 43.4 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். சரி இவர்களுக்கு இந்த 
தனியார் தொழிற்சாலைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பு? 20 சதவீதத்துக்கும் குறைவு. இந்த வேலைகள் அனைத்துமே உடல் உழைப்பு சார்ந்த சாதாரண 
வேலைகள்தான்!
வட மாநிலங்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தனியார் துறையில் ஓரளவுக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 
மாநிலங்களில் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரின் விகிதத்தைவிட அவர்களுக்கு தனியார் துறையில் கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்தே 
இருக்கிறது.
நாட்டின் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக் கின்றனர் 19.1% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உள்ளனர். ஆனால், அவர்கள் தனியார் துறைகளில் பெற்றுள்ள வேலை வாய்ப்பு என்னவோ 5 விழுக்காடுதான். இதுவும் கூட கூலி மற்றும் அதற்கு சமமான வேலைகள் தான்!
குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையினர் 22% மற்றும் 23%. ஆனால் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இவர்கள் பெற்றுள்ளதோ வெறும் 9 விழுக்காடு கூலி வேலைகளே.
இதைவிட கொடுமை என்னவெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. என்பது ஆறுதல் பட்டுக்கொள்ளக்கூடிய செய்தி. அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் சுயமரியாதை உணர்வோடு விடுதலை வேண்டி போராடி வருவதின் காரணமாகத்தான்.
அதேபோல் கேரளம் 100 விழுக்காடு கல்வி கற்ற மாநிலம். அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் 
விழுக்காட்டைவிட கூடுதலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.இந்த விசயத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். 
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இவர்களில் 18 சதவீதம் பேருக்கு தனியார் துறைகளில் வேலைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய வேலைகளில் அதிகாரிகள் மட்டத்தில் அதிகம் சேர்க்கப்படுவ தில்லை. மாறாக, உயர் வகுப்பினர் ஈடுபட விரும்பாத வேலைகள் மட்டுமே அதிகப்படியாக அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சுயமரியாதை ஜாதி ஒழிப்பு என்றிருந்த பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் நிலை இது என்றால், மற்ற மாநிலங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
தனியார்துறையிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் சமூகநிதி காக்கப்பட 
வேண்டும் என்பது தமிழகத்தின்  நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதில் குறியாக உள்ளனர் ஆதிக்க ஜாதியினர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
நான் ஜாதி முறைக்கு எதிரானவன். ஜாதிய ஒடுக்குமுறை எனக்குப் பிடிக்காது என்று கூறிக் கொள்ளும் இந்த ஜாதீய சக்திகள், உள்ளுக்குள் இரட்டை டம்ளர் முறைகளை ஆதரிப்பவர்களாகவும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர்களாகவும் உள்ளனர். அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு நிகரான பதவிகளை தனியார் துறையில் 
பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாகவும் உள்ளனர்.

இந்த நிலையை மாற்றுவதற்குரிய மனிதநேய சிந்தனை அனைத்து மக்களிடமும் எழுந்தால் மட்டுமே சமத்துவம் எல்லா இடங்களிலும் பரவ வாய்ப்பிருக்கிறது.

எரிக்கப்படும் குடிசைகள் துரத்தப்படும் மக்கள்


சிங்காரச் சென்னைக்கு பலியாகும் ஏழைகள்


சிங்காரச் சென்னையை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் முதன்மையான திட்டம் என்னவென்றால், குடிசைகளை அப்புறப்படுத்துவதுதான். ஏனென்றால், சென்னையின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பது குடிசைகள் தான் என்ற எண்ணம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பொது புத்தியில் உருவாகி இருப்பதுதான். 
இவர்களின் எண்ணத்திற்கு பலியான குடிசைகளும் மக்களும் எண்ணற்றவை. கடந்த பல ஆண்டுகளாகவே கூவம் நதியோரம் இருப்பவர்ளையும் சாலையோரம் வசிப்பவர்களையும் நாகரீக வாழ்விற்கு இட்டுச் செல்கிறோம் என்ற போர்வையில் அவர்களின் வாழ்விடங்களை விட்டு அப்புறப்படுத்தி நகருக்கு வெளியே துரத்தி வருகின்றன இந்த அரசுகளும், அரசு எந்திரங்களும். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி செய்ய மறுக்கும் மக்களை வஞ்சகமாக துரத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டின் மய்யத்தில் சென்னையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் திடீர்த் தீவிபத்துக்கள் ஏற்படத் தொடங்கின. கூவம் முதலான கழிவு நீர்ச் சாக்கடைகளாக மாற்றம் பெற்றுள்ள நதிக் கரைகளின் ஓரம் அமைந்திருந்த குடிசைப் பகுதிகள் பலவும் கமுக்கமான முறையில் தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. அக் குடிசைகளில் வாழ்ந்து வந்த எளிய மக்கள் செம்மஞ்சேரி முதலான தொலைவிலுள்ள மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டனர். 
எரிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. கமுக்கமான முறையில் தீப்பிடிக்கும் பகுதிகள் அனைத்தும், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படக்கூடிய பகுதிகளாக இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த கமுக்கமான விபத்துகள் அடித்தள மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்தன என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
சென்னை பெருநகரில் அண்மையில் இரண்டு பெரிய தீவிபத்துகள் சமூக ஆர்வலர்கள் நடுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலாவது சென்னை கிரீம்ஸ் சாலையில் கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் கார்டன் அல்லது திடீர் நகர் (ஆற்றோரப் பகுதி) என்று அழைக்கப்படுகிற குடிசைப்பகுதி கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக மும்முறை தீவிபத்து ஏற்பட்டு சுமார் 130க்கும் மேற்பட்ட குடிசைகள் அழிந்துள்ளன. அம்மக்கள் இன்று மழையிலும் வெயிலிலும் இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கலைஞர் நகர் (கே.கே.நகர்) பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து போயின. அந்த மக்களுக்கு சரியான மாற்றிடம் கொடுக்கப்படாததாலும் உரிய நிவாரணம் கிடைத்திடாத காரணத்தினாலும் சாலைகளில் தங்கவேண்டிய அவலத்திற்கு ஆளாகினர். இந்த இரண்டு பகுதிகளும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற பகுதிகள் தான். இவர்களும் இடத்தை காலி செய்யச் சொல்லி ஏற்கனவே எச்சரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த திட்டமிட்ட விபத்துகள் குறித்து ஏற்கனவே குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்’ என்னும் அமைப்பு சமூக ஆர்வலர்கள் பலரையும் உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து ஒரு விரிவான அறிக்கையை அளித்தது. 
அக்குழு இது தொடர்பான பல அம்சங்களையும் ஆய்வு செய்து இரு பகுதிகளாக அவ்வறிக்கையை உருவாக்கியது. முதற்பகுதி இத் தீவிபத்துக்கள் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான சதியாக இருக்கலாம் என்கிற அய்யத்தை முன் வைத்து விசாரணை ஒன்றைக் கோரியது. அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்த கோரிக்கைகள் சிலவற்றையும் முன் வைத்தது. இரண்டாவதாக ஏற்கனவே தொலை தூரங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்தும், நிலப் பறிப்பு மற்றும் மீள் குடியேற்றம் குறித்தும் காத்திரமான சில பரிந்துரைகளை முன் வைத்தது.
இவ்வறிக்கை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டதோடு ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு மக்கள் நடுவே வினியோகிக்கவும் பட்டன. எனினும் அரசு இதை முற்றிலுமாகப் புறக்கணித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலன்களும் கிட்டவில்லை என்பதோடு குடிசைகள் எரிக்கப்படுவதும் மக்கள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.

இந்தக் குடிசைப் பகுதிக்கு இணையாகத்தான் கூவத்தின் மறுகரையில் மதுரவாயிலிலிருந்து சென்னைத் துறைமுகத்தை இணைக்கும் அதிவேக உயர் நெடுஞ்சாலைப் பணி நடை பெறுகிறது. இதற்காக அமைக்கப்படும் தூண்கள் இவ் வீடுகளுக்கு நேர்ப் பின்புறம் அமைந்துள்ளன. இந்தப் பணி நடைபெறும் இடங்களில் அமைந்திருந்த பல குடிசைப் பகுதிகளும் இப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் திடீர் திடீரென எரிந்து சாம்பலாயின. 
அதேபோல் கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு சென்னை கே.கே.நகர் காசி தியேட்டர் அருகே ஜாபர்கான்பேட்டையில் அமைந்துள்ள அம்பேத்கார் நகர் குடிசை பகுதிகள் திடீர் தீவிபத்தில் ஏற்பட்டது. இதனால்  குடிசைகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் வெளியே ஓடி வந்தார்கள். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் பொருட்களோடும், குழந்தை குட்டிகளோடும் கதறி அழுதது மிக கொடுமையான நிகழ்வு.
இந்த தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகி இருக்கலாம். மீதமுள்ள குடிசைகள் அடுத்தடுத்த விபத்துகளில் காலி செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

தீ விபத்தைக் காரணம் காட்டி அம்மக்களைச் செம்மஞ்சேரி முதலான தொலைதூரப் பகுதிகளுக்கு விரட்டியடிக்கும் அரசு முயற்சி கண்டிக்கத் தக்கது. அது அம்மக்களின் வாழ்வில் பெரிய அழிவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட அம் மக்கள் அனைவரும் தலித்கள். முதல் தலைமுறையாகப் படிக்க நேர்ந்துள்ள அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இதனால் பாழாகும். எனவே அரசு இம்முயற்சியைக் கைவிட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கேயே வசிக்க அனுமதிப்பதோடு ஏற்கனவே குடும்ப அட்டை, மின்வசதி ஆகியவற்றுடன் நீண்டகாலமாக அங்கேயே வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் அவர்களுக்கு அமைச்சர் வளர்மதி அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களித்தபடி கூவம் கரையில் தடுப்புச் சுவர் எழுப்பி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
அல்லது 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றி அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பதை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. 
அரசு நினைத்தால் தற்போது சென்னை நகருக்குள் வசிக்கும் குடிசைப் பகுதியினரை நகருக்குள்ளேயே குடியமர்த்த வாய்ப்புண்டு. அதை நடைமுறைப்படுத்த தேவை அரசின் கவனமும் அக்கறையும்தான் .